மாணிகுழி

திருமாணிகுழி எனச் சுட்டப்படுகிற இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்று உள்ளது. கெடில நதியின் கரையில் உள்ள இவ்வூர், சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது. திருமா லோடு தொடர்புகாட்டி. அமையும் சம்பந்தர். சேக்கிழார் கூற்றுகள் முதலில் திருமால் கோயில் இங்கு இருந்து பின்னர். இவ்வாறு புராணக் கதையாகத் திரிந்ததோ என்ற எண்ணத் திற்கு இடமளிக்கிறது.
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்த மதொருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழில் நீடு குல மஞ்ஞை நடமாடுவது கண்
டொத்த வரி வண்டுகளுலாவியிசை பாடுதவி மாணி குழியே
என்பது சம்பந்தர் கூற்று (335-4).
போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணிக் குழியணைந்தார் (6-90-2-4)
எனச் சேக்கிழார் சுட்டுகின்றார். கெடில நதிக்கரையில் உள்ளது என்பது சேக்கிழார் பாடலில் புலனாகிறது.