திருமழபாடி எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சேரரில் ஒரு கிளையினரான மழவரின்பாடி மழ பாடி ஆயிற்று என்பர். இறைவன் மழுஏந்தி நர்த்தனம் செய் திருக்கிறார். அதனால் மழுஆடி என்று பெயர் பெற்று மழபாடி ஆயிற்றென்பது புராண எண்ணம்.
மழபாடி ஆண்டானை ஆரமுதை
அன்றயன் மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை (18)
என்பது க்ஷேத்திரக் கோவை வெண்பா.
பாடெலாம் பெண்ணையின் பழம் விழப்பைம் பொழில்
மாடெலா மல் குசீர் மழபாடியே’
என்று ஞானசம்பந்தர் சுட்டும் தன்மை, பனைகளின் மிகுதியைத் தருகின்றது. இந்நிலையில் இன்று தலவிருட்சமாகப் பனை அமைவது பொருத்தமாக அமைகிறது. இதன் தாலவனம் என்ற பெயரும் பனைகளின் அடிப்படையில் எழுந்ததே. கொள்ளிடத்தின் கரையில் அமைந்துள்ள கோயிலை உடையது இவ்வூர். இவ்வூர் பற்றி ஆராயும் போது, மழவர் வசித்த அல்லது ஆண்ட பகுதி என்ற நிலையில் பெயர் பெற்ற ஊர் இது என்பது தெரிகிறது. மேலும், இன்று இது இரு பிரிவாகக் காணப்படுகிறது. ஒன்று மேன்மழபாடி இன்னொன்று கீழ்மழபாடி. கீழ்மழபாடி பகுதியில் கோயில் இருந்தமை காரணமாக இது திருமழபாடி என இன்று வழங்கப்பட்டு வர, மேன் மழபாடி லால்குடி என்ற பெயரால் சுட்டப்படுகிறது. மழபாடி யினை மழநாடு என்றும் சுட்டினார் என்பதை. சேக்கிழார் வாயிலாக அறிகின்றோம். (பெரிய – 20-1. 7) மேலும் புடைவளர் மென் கரும்பினொடு, பூகமிடை மழபாடி எனவும் இவர் இயம்பு கின்றமை, மழபாடியின் செழிப்பினைக் காட்ட வல்லது.