மல்லை

மகாபலிபுரம் என்று இன்று சுட்டப்படும் ஊர். மாமல்லன் விருது பெற்ற நரசிம்ம பல்லவன், செய்த கலைப்பணிகளின் சிறப்பே. இக்கடற்கரைத் தலத்துக்குப் புகழ் அளிக்க, இவன் பெயராலேயே மாமல்லபுரம் என்று சுட்டப்பட்டது என்பது பொருத்தமாக அமைய, மகாபலியோடு தொடர்பு படுத்திப் புராண கதையை அடிப்படையாக்கல் பொருந்தாத ஒன்றாகும். திருமங்கையாழ்வார் இதனைக் கடல் மல்லை என்கின்றார். மரூஉப் பெயராக வழங்குதல் ஊர்ப்பெயர்களின் ஒரு தன்மை என்பதை இப்பெயரும் நிலைநாட்டுகிறது. தலத்தில் சயனித்திருப்பதால் இங்குள்ள இறைவன் தலசயனன் என்றும் இடம் தலசயனம் என்றும் வழங்கி வருகிறது. திருமங்கையாழ்வார். பூதத்தாழ்வார் பாடல்கள் இத்தலத்துக்கு அமைகின்றன.