மறைக்காடு

இன்று மொழி பெயர்க்கப்பட்ட காரணத்தால், வேதாரண்யம் என்று பெயர்க்கப்பட்ட இவ்வூரின் பின்னைய பெயரே செல்வாக்குடன் திகழ்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். மறைக்காடு என்பது நான்கு வேதங்களாலும் பூசித்து பேறு பெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது என்ற எண்ணம் மறைக்காடு என்பதற்குரிய அடிப்படையை விளக்குகிறது. எனினும் காடு காட்டுப்பகுதியில் உள்ள தலம் என்பதற்கு விளக்கம் தருகிறது. இன்றைய இதன் இருப்பிடமும், கோடிக்கரை போன்ற பிற ஊர்ப்பெயர் எண்ணங்களும், இதன் கடற்கரை அருகாமை யையும் காடு சூழ்ந்த பகுதியாக திகழ்ந்தமையினையும் உணரச் செய்கிறது. மரை என்பதற்கு மான் என்றும் மறை என்பதற்கு சிவப்பு புள்ளிகளையுடைய மாடு முதலியன என்றும் பொருள் தமிழ் லெக்ஸிகன் தரும் நிலையில் முதலில் இயற்கையாக மான் அல்லது மாடுகளின் மிகுதி காரணமாக மரைக்காடு அல்லது மறைக்காடு என்று பெயர் பெற்ற இவ்விடம், பின்னர் கோயில் காரணமாகப் பெயர் பெற்று, புராணத்துடன் வேதத்துடன் இணைக்கப்பட்டு இருக்கக் கூடுமோ எனத் தோன்றுகிறது. இதற்கு வேதவனம், சத்தியகிரி, ஆதிசேது என்ற பெயர்களும் உண்டு. மறைவனம் என்னும் இத்தலத்தின் பெயரை மறைசை என்றும் இலக்கிய வழக்கு கொள்கின்றனர். சம்பந்தர், அப்பா, சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தல மாக மட்டும் அன்றி, பொதுவாகச் சைவர் அனைவரும் வழிபடும் இடமாக இது திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை நாம் இலக்கியச் சான்றுகள் மூலமாகத் தெரியவருகிறோம்..
இறையாய் மறைக் காட்டாய் மாதவனே-சிவபெரு – திருவந்-40
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா -46
மயரும் மறைக்காட்டிறையினுக்கு ஆட்பட்ட வாணுதலே பொன்வண் -37
சீருலாம், மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப் – திருமும் – கோ -26
இசையா அணிமறைக் காட்டுக் குரைசேர் குடுமிக்
கொழுமணிக்கதவே – நம்பி – திருமும்-4
முத்தம் கொழிக்கும் மறைக்காடு – பெரிய – திருநா-264
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக்காடு – திருஞான – 385-5
மதுரம் பொழில் சூழ் மறைக்காடு -173-1
வங்கக் கடல் சூழ் மறைக்காடு -2
பூக்கும் தாழை புறணி பருகெலாம்
ஆககும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ – திரு.நா – 124-6
பாரூர் மலிசூழ் மறைக்காடதன் தென் பால் -சுந் – 32-10
அங்கக் கடல் அருமாமணியுந்திக் கரைக்கேற்ற
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே -71-5.