திருமருகல் என்று வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மருகல் என்பது ஒரு வகை வாழை இது கல்வாழை எனவும் வழங்குகிறது. கோச்செங்கட்சோழள் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. யானை ஏறாப் பெருங்கோயில் என்ற எண்ணம் இவ்வூர்த் தொடர்பாக அமைகிறது.
நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்,
செழுநீர் மருகல் நன் நாட்டமர் தஞ்சைச் செருத்துணையே (66)
என்று இயம்புகின்றார். பெரிய புராணமும் இக்கருத்தை,
தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருக நாட்டுத் தஞ்சாவூர் (61-1)
என்றியம்புகிறது. இதனின்றும் மருகல் நாடு சோழநாட்டைச் சார்ந்தது என்பதும், பல ஊர்களைத் தன்னகத்தே கொண்ட மருகல் ஒரு சிறந்த நாடாக விளங்கியது என்பதும், அவற்றுள் ஒன்று தஞ்சை என்ற ஊர் என்பதும் தெளிவுபடுகிறது. ஞானசம்பந்தரும் அப்பரும் மருகல்பற்றிப் பாடி உள்ளனர். எனினும் இவர்கள் பாடல், மருகல்பற்றிய ஊர்ப்பெயர் விளக்கத்திற்குரிய எந்த கருத்தையும் நல்கவில்லை. மாடம்சூழ் மருகல் என்றும் (202-2) மாடநீண் மருகல் (202-8) என்றும் நாவுக்கரசர் சுட்ட,
மைதவழ் மாட மலிந்த வீதி மருகல் (6-1)
மடையார் குவளை மலரும் மருகல் (154-1)
கொந்தார் குவளை மலரும் மருகல் (154-2)
வலங்கொண்ட மதிள் சூழ் மருகல் (154-8)
என்று சம்பந்தர் பாடுகின்றார். தலவிருட்சம் வாழை என்பதும் மருகல் வாழை காரணமாகப் பெயர் பெற்ற ஊர் என்பதும் யரவலான கருத்தாக அமைகிறது. நம்பியாண்டாரும் மருகல் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.