மாயூரம் என்றும் மாயவரம் என்றும் பிற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மயிலாடுதுறை இன்று திரும்பவும் தன் பழம் பெயரைப் பெற்று இலங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் காவிரிக் கரைத்தலம். துறை என்ற இவ்வூர்ப் பெயரின் பொதுக்கூறு. காவிரிக் கரையில் இதன் இருப்பிடத்திற்குப் பொருத்தமாக அமைகிறது. மயில்கள் மிகுதியாக இருந்தமையே இப்பெயருக்குரிய காரணமாகலாம். எனினும் பக்தியுணர்வு, இறையோடு இப்பெயரை இணைக்கச் செய்து, கதைகளையும் இவ்வூருக்கு என்று உருவாக்கி விட்டிருக்கக் காண்கின்றோம். அவற்றுள் அம்மை மயிலாய் ஆடிய துறை தான் மயிலாடுதுறை என்ற எண்ணமும் ஒன்று.
குரவஞ் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறை (38-2)
எனவும்,
கந்தமலி சந்தினொடு காரகிலும், வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்து மயிலாடுதுறை (328-2)
எனவும் சம்பந்தர் இதனைப் பாடுகின்றார். இப்பெயரின் பொருளைத் திருநாவுக்கரசரின்
கோலும் புல்லும் ஒரு கையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயர முற்றென் பயன்
நீல மாமயிலாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே (153-8) என
நீலமா மயில் ஆடுதுறை’ எனச் சுட்டும் தன்மையில் காண்கின்றோம். பெரிய புராணமும் இவ்வூரினை,
வாவி சூழ் திருமயிலாடு துறை (34-437)
மல்கு தண்டலை மயிலாடு துறை -438)
எனக் காட்டுகிறது.