மதுரை

மதுரை மாவட்டத்தின் தலை நகரம் மதுரை. நான்மாடக் கூடல் சிவராஜதானி, பூலோக கயிலாயம், துவாத சாந்தபுரம், சீவன் முத்திபுரம் ஆலவாய், கடம்பவனம் போன்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகப் பண்டு தொட்டு இருந்துவரும் மதுரைச்சிறப்பு இலக்கியங்களில் மிக்க மணம் கமழ்கின்றது. பல கதைகள் மதுரை நகர்க்குரிய பெயர்கள் தொடர்பாக அமைகின்றன. அப்பர் சம்பந்தர் பாடல்கள் பல அமையினும், இதன் சிறப்பைச் சங்க காலத்திலிருந்தே அறிய இயலுகிறது. இதன் நகரமைப்புச் சிறப்பு, கோயில் சிறப்பு முதலியன, அங்குத் தெளிவாக இயம்பப்படுகின்றன. மதுரைக்குரிய பெயர்கள் ஒவ்வொன்றும் காரணப் பெயராக அமைந்திருக்கக் காண்கின்றோம். இவற்றுள் பல பெயர்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. மதுரை நான்மாடக்கூடல், கடம்பவனம், ஆலவாய் போன்ற பிற காரணங்களைக் கொண்டு திகழ்வன போல தோன்றுகின்றன. சங்க இலக்கியத்தில் கூடல் என்ற பெயரே பல இடங்களில் குறிப்பிடப்படுவதாகவும். மதுரை சில இடங்களில் அமைந்தாகவும் தமிழ் இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் (முதல் தொகுதி) ஆசிரியர் இயம்புகின்றார். 1. சிவபெருமான் தன் சடையில் சூடிய பிறையில் உள்ள அமுதத்தைத் தெளித்து இந்நகரை நிர்மாணித்தால் இந்நகரமானது மதுரமாக இருந்திருக்கிறது. கன்னி கரியமால் காளி ஆலவாய் என்னும் நால்வரும் பிரபலமாக இருக்கும் இடம் ஆனதால் நான் மாடக்கூடல் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கன்னியான மீனாக்ஷி இருந்து அரசு புரிந்ததால் கன்னிபுரீசம் என்றும், சிவ பெருமான் சுந்தர பாண்டியனாக இருந்து அரசாண்ட காரணத்தால் சிவராஜதானி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. என சங்க காலத்தில் கூடி இருந்து தமிழாய்ந்தமை காரணம் இதற்குக் கூறுவர் (பக் -118), இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. அக்காலத்தில் இத்தகைய நிலை அதிகமிருந்தமை காரணமாக, கூடல் என்ற வழக்கு மிகுதியாக இருந்தது எனலாம். எனினும் கூடலை ஒத்த பழமையுடையது மதுரை என்பது இப்பெயர் காட்டும் உண்மை. ஒரு ஊருக்குப் பல பெயர் அமைவது அதன் பல சிறப்புகளையும் காட்டும் தன்மையாக உள்ளது. மதுரை இவ்வாறே தம் பல சிறப்பு காரணமாகப் பல பெயரைப் பெறுகிறது. கடம்பமரங்கள் மிகுதியாக இருந்தமையால் கடம்பவனம் என்ற பெயரையும், கோயில் செல்வாக்கு காரணமாக ஆலவாய் என்ற பெயரையும் அளித்தது போன்று மருத மரம் காரணமாகப் பெயர் பெற்றது மதுரை எனத்துபணியலாம். க.ப. அறவாணன் இந்தியாவில் இருந்து வந்தோரால், சூட்டப்பட்ட பெயர் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நம் தமிழகத்தின் பழம் ஊர்ப் பெயரில் தாவரப் பெயர்களால், தனித்த ஒரே சொல்லாக அமைவனவற்றை நோக்கவும் இது உறுதிப்படுகிறது. மேலும் தமிழ் இலக்கியத்தில் இடப்பெயர்கள் என்ற கட்டுரையில் ச.வே.சும்பிரமணியம் அவர்கள் மருதமரமே மதுரைக்கு அடிப்படை என்பதைச் சிறப்பாக விளக்குகின்றார்.