மணஞ்சேரி

மணஞ்சேரி என்று இன்று வழங்கப்படுகின்ற இத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மணஞ்சேரி என்ற ஒரே ஊர் இன்று கீழைத் திருமணஞ்சேரி, மேலைத் திருமணஞ்சேரி என்ற இரண்டு பெயரில் அமைந்திருக்கின்றன. இவற்றின் அருகாமை, இவ்வுண்மையை உணர்த்தும். இரண்டு பகுதியிலும் சிவன் கோயில் இருந்தமையினை, இரண்டு தலங்களும் பாடல் பெற்ற நிலை காட்டுகிறது. எனவே ஒரே ஊராக இருந்த மணஞ்சேரி, பின்னர் சிவன் கோயில் சிறப்பு காரணமாக மேலை, கீழை எனக் குறிக்கப்பட்டு இருக்கலாம். இன்று மேலை மணஞ்சேரி எதிர் கொள்பாடியென அழைக்கப்படுகிறது
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரி, (152-1)
வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி (152-2)
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ் சேரி (152-3)
மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி (182-7)
என சம்பந்தரும்,
அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி (201-5)
சீர் பரந்த திரு மணஞ்சேரி (201-6)
என அப்பரும் இத்தலம் பற்றி இயம்புகின்றனர். இவற்றை நோக்க, இப்பெயர் ஊர்ச்செழிப்பு காரண மாக, ஏற்பட்ட மணம் காரணமாக மணமுடைய சேரி என்ற பொருளில் முதலில் பெயர் பெற்று, கோயில் சிறப்பு காரணமாக திரு அடை இணைந்து, பின்னர் கீழை, மேலை எனத் தனித்துச் சுட்டப்படத் தொடங்கிற்று எனக் கருதலாம். காவிரியின் வட கரைத்தலம் இது என்பதும், இவ்விடத்தின் செழிப்பினைச் சுட்டத் தக்கதாக அமைகிறது.