பெரிய புராணம் சுட்டும் ஊர், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலம் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. மழநாட்டில் உள்ள ஒரு ஊராக இது இருந்தது என்பதனைச் சேக்கிழார்.
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடுபரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இணைத் தேற
நீடு வளத்தது மேன் மழநா டென்னும் நீர் நாடு (20-1)
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன் மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற் கேயோர்
மங்கலமானது மங்கலமாகிய வாழ் மூதூர் (30-7)
என இவ்வூர் மழநாட்டுள் மிக்க சிறந்திருந்த நிலையைக் காட்டுகின்றார். இங்குள்ள கோயில் பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லையாயினும், இன்று திருமங்கலம் எனச் சுட்டப்படும் தன்மையில் கோயில் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. சிறப்பான செல்வமிக்க ஊர் என்ற அடிப்படையில் இப்பெயரை இவ்வூருக்குச் சூட்டியிருக்கலாம்.