திருமங்கலக்குடி என்ற இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. காவிரியின் கரையில் உள்ள இத்தலத்தை, சம்பந்தர். அப்பர் இருவர் பாடலாலும் தெரிகிறோம்.
காவிரியின் வடகரைக் காண்டகு
மாவிரியும் பொழில் மங்கலக் குடித்
தேவரியும் பிரமனும் தேடொணாத்
தூவெரிச் சுடர் சோதியுட் சோதியே (187-2)
என்கின்றார் அப்பர். மேலும்
செல்வம் மல்கிய மங்கலக் குடி (187-5)
மாதரார் மருவும் மங்கலக் குடி (187-7)
வண்டு சேர் பொழில் சூழ் பங்கலக் குடி (187-8)
என்றும் இதன் சிறப்பு உரைக்கின்றார். காவிரிக்கரையில் இது அமைந்திருந்ததனைச் சம்பந்தர்,
சீரினார் மணியும் அகில் சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்கலக்குடி
என்ற பாடலடிகள் காட்டுகின்றன. சிறப்பு, பெருமை குடிகள் வாழ்ந்த இடம் என்ற நிலையில் மங்கலம் என்ற பெயர் அடை அமையப் பெற்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பெரிய புராணம் செஞ்சடை வேதியர்’ மன்னும் திருமங்கலக் குடி என இதனைச் சுட்டுகிறது. (34-293-4)