தஞ்சைமாவட்டத்தில் கீழைக்கடற்கரையில் தரங்கம்பாடிக் கருகில் பொறையாறு என்னும் ஊர் உள்ளது. கல்லாடனார் என்ற சங்ககாலப் புலவரால் பாடப்பெற்ற பொறையாற்றுக் கிழான் என்பவன் பொறையாற்றின் தலைவன் போலும். அவன் ‘பெரியன்’ என்றே குறிக்கப் பெறுகிறான். வலிமை என்னும் பொருளுடைய பொறை என்னும் சொல்லடியாக இவ்வூர்ப்பெயர் பொறையாறு எனப்பட்டதோ என்றும் எண்ண இடமளிக்கிறது. ஊர்த்தலைவன் வலிமையுள்ள ஒரு பெருந்தலைவனாக இருந்து அவன் வலிமை காரணமாகவே அவனது ஊரும் பெயர் பெற்றதோ எனவும் கருதத் தோன்றுகிறது.
“நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல்தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?” (நற். 131: 7 9)