பொடி’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;