இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சோவிலடி எனச் சுட்டப்படும் ஊர் இது. சங்ககாலம் தொட்டே பெரும்புகழ் பெற்று விளங்கும் இவ்வூரின் அன்றைய பெயரைப் பேர்ப்புறம் என சங்க இலக்கியங்களும் திருப்பேர்த் திருப்புறம் என சாசனங்களும் சுட்டுகின்றன. சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர்மூண்ட களம் திருப்பேர்ப் புறம் எனத் தெரிகிறது. இவ்விடம் திருமால் கோயிலாலும், சிவன் கோயிலாலும் சிறப்பு பெற்றமையும் தெரிகிறது.
திருப்பேர்த் திருப்புறத் துறை மகாதேவர்
உடையார் திருப் புறத்துறைவார்
திருப்புறத் துறையும் கிவபெருமானடிகள்
என இங்குள்ள சிவன் பெருமை சுட்டப்படுகிறது. இக்கோயிலே சடைமுடி’ என அக்காலத்து வழங்கப்பெற்றது. திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பகுதி, சடைமுடியைக் குறிப்பிடுகிறது. சடை முடியாகிய சிவன் உறை கோயில் என்ற நிலையில் திருப்பேர் நகரில் உள்ள இக்கோயில் சுட்டப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சடைமுடியெனச் இங்குள்ள திருமாலைப் பரவியவர்கள் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்.
வண்டறை பொழில் திருப்பேர் வரியணையில், பள்ளி
கொண்டுறைகின்ற மாலை என திருமங்கையாழ்வார் (நாலா -1437)
திருமாலைப் புகழ்கின்றார். பெரிய இடமாக, குடி யிருப்புத் தலமாக அமைந்த காரணத்தால், இப்பெயர் தோன்றி மிருக்கலாமா ? எனச் சிந்திக்கலாம்.