மிழலை நாட்டு மிழலை வெண்ணி நாட்டு மிழலை எனத் திருநாட்டுத் தொகையுள், சுந்தரர் குறிப்பிடுகின்றார். பெரிய புராணத்தில்,
சூத நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகந் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய் நிலவுங் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலைநாட்டு பெரு மிழலை (29-1)
பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணத்தில் குறிப்பிடுகின்றார். சேக்கிழார் மேலும் அன்ன தொன்மைத்திருப்பதி கண் என்று குறிப்பிடும் (2) நிலை இது பண்டு தொட்டே சிறந்து விளங்குமொரு ஊராகத் திகழ்ந்தனையும் சுட்டுகிறது. இம்மிழலை நாடு பற்றிய தமது ஆய்வில், அறிஞர் ஒருவர் இராசேந்திர சிங்க வள நாடென்பது காவிரியாற்றின் வடகரையில் இருந்த ஒரு பெரிய நிலப்பரப்பாகும். இவ்வளநாட்டில் சற்றேறக் குறைய இரு பது உள் நாடுகள் இருந்தன. அவற்றுள் மிழலை நாடு என்பதும் ஒன்று என்று தனது ஆய்வுக் கருத்துகளைச் சொல்லும் நிலையில், எனவே மிழலை நாடு எனப்படுவது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலுகாவில் காவிரியாற்றிற்கு வடக்கே மண்ணி யாற்றின் தென்கரை வரையில் அமைந்திருந்ததோர் நாடு என்று கூறிச் செல்கின்றார். பெரு மிழலை அந்நாட்டின் தலைநகர் என்றும் உரைக்கின்றார். சங்க காலத்தில் சுட்டப் படும் மிழலைக் கூற்றம் பாண்டிய நாட்டுப் பகுதி என்பதும் இவரது எண்ணம்.