பூவனூர்

பூவனூர் என்ற தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பாமணி ஆற்றின் கரையில் உள்ள தலம் சுக முனிவர் மலர் வனம் வைத்து வழிபட்டு அருள் பெற்ற தலம். அப்பர், இங்குள்ள சிவனைப் போற்றும்போது.
மேவ நூல் விரி வெண்ணியின் தென்கரைப்
பூவனூர் புகுவார் வினைபோகுமே (179-4)
எனப்பாடுகின்றார். எனவே ஆற்றின் கரைத்தலம் இது என்பது தெளிவாகிறது. ஆற்றின் கரையில் உள்ள தலம் ஆகையால் செழிப்புடன் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேற்கண்ட புராணக் கருத்தின்படி மலர் வனம் இருந்த நிலையை அறிகிறோம். எனவே மலர்வனம், பூவனம், பூவனஊர் பெயரால் வழங்கப்பட்டு வந்த ஊர் பின்னர் பூவனூர் என வழங்கத் தொடங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இறைவனின் பெயர் புஷ்பவன நாதர் என்பதும் இக்கருத்துக்கு வழி வகுக்கிறது.