பூவணம்

திருப்பூவணம் என்று மதுரை மாவட்டத்தில் காணப்படும் தேவார மூவராலும் போற்றப்படுகிறது. மாணிக்கவாசகரும் இதனை,
பூவண மதனிற் பொலிந்திருந்து அருளித்
தூவண மேனி காட்டிய தன்மையும் (கீர்த்தி – 50-51)
எனப் பாடுகின்றார். இதன் பெருமையை,
முறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர் கடாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செம்மை யோங்குத் தென்றிருப் பூவணமே – (64-1)
என்று சம்பந்தர் சுட்டுவது விளக்கவல்லது. மேலும் வைகைக் கரையில் அமைந்த இதன் நிலையையும்,
பாரார் வைகைப் புனல் வாய்ப்பரப்பி பன்மணி பொன் கொழித்துச்
சீரார் வாரி சேர நின்ற தென்றிருப் பூவணமே (64-3)
என்ற இவரது பாடல் சித்திரிக்கின்றது. பொழில் திகழும் பூவணம் என்று பாடுகின்றார் அப்பர் (232). சுந்தரர், சீரின் மிகப் பொலி யும் திருப்பூவணம் (11-10) எனக் கூறும் போது இவ்வூரின் சிறப்பும் தெரிகிறது. பூக்கள் வனம் பூவணமாயிருக்கலாம் என நினைக்கலாம். பழையூர், புதூர், கோட்டை, நெல்முடிக்கரை என்ற நான்கு பகுதிகளையுடையது பூவணம் புஷ்பவனகாசி. பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், இலட்சுமிபுரம், பிரமபுரம், இரசவாதபுரம் என்பன இதன் வேறு பெயர்கள்.