புள்ளம் பூதங்குடி

திருமங்கை ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்கள் இங்குள்ள திருமால் குறித்து அமைகின்றன. இப்பாடல்கள் மிகச் சிறப்பாக இங்குள்ள இயற்கைச் செழிப்பைச் சித்திரிக்கின்றன.
நறிய மலர் மேல் சுரும் பார்க்க, எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங்குடி (நாலா -1348)
பள்ளச் செறுவில் கயலுசளப் பழனக் கழனி அதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக் கிரை தேடும் புள்ளம் பூதங்குடி (,,1349)
மேலும்,
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடமெழிலாரும் புள்ளம் பூதங்குடி (… 1351)
என்ற பாடலடிகள் இங்குள்ள மக்கள் வாழ்வியற் சிறப்பையும் தருகின்றன. இவற்றை நோக்கப் புள்ளம் என்ற சிறப்பு விகுதியைப் பூதங்குடிக்கு, பின்னர் ணைத்திருக்கின்றனர் என்பதும், அழகிய புட்கள் நிறைந்த பகுதியாக இது திகழ்ந்திருத்தலே இதற்கு அடிப்படை என்பதும் தெளிவாகிறது. பூதனார் என்ற புலவர் பெயர் சங்க இலக்கியத்துள் இடம் பெற்றுள்ளது. (நற் -29,புறம் 259) பூதன் என்பது எந்த அடிப்படையில் எழுந்து பெயர் என்பது தெரியவில்லை. எனினும் அம்மரபு இருந்தமை தெளிவாகிறது. இதனை ஒட்டி ; பூதன் குடி என்ற பெயரையும் நாம் சுட்ட லாம். பூதத்தாழ்வார் என்ற பெயரும் சுட்டத்தக்கது.