புறம்பயம்

இப்பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பிரளயத்திற்குப் புறம் பாய் இருந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர். மூவர் பாடலும் பெற்ற நிலை இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைத் தெரிவிக்கும். இதனையே சம்பந்தரும், அடியார் வழிபாடு ஒழியாத்தென் புறம்பயம் எனச் சுட்டு கின்றார் (375-8). இதன் செழிப்பைச் சுந்தரர்,
மதியஞ்சேர் சடைக் கங்கையானிட மகிழு மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லி நாறும் புறம்பயம் (35-2)
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயற் றோன்று தாமரைப் பூக்கள்
மேல் புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் (35-5)
எனப் பாடுகிறார். மண்ணியாற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் இருக்கும் இவ்வூர், பக்கத்தே தண்ணீரையுடையது என்ற பொருளில் இப்பெயர் பெற்றது என்ற எண்ணம் இவண் சிந்திக்கத் தக்கது. இங்குள்ள கோயில் பெயர் ஆதித்தேச் சுரம்.