குடியிருப்பினைக் குறித்து வரும் சொல் சம்ஸ்கிருதச் சொல் “புரம்” ஆகும். நாட்டின் தலைநகர் “புரம்” எனப்பட்டதாகச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது.[20]
சிங்கபுரம், கபிலபுரம் என்ற இரண்டு ஊர்களைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது.[21] இவை பிற நாட்டு நகரங்களாகும். தமிழ்நாட்டில் “புரம்” என்ற பெயரில் நகரங்கள் எதுவும் அக்காலத்தில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் “புரம்” எனும் பெயரில் ஊர்கள் இருந்துள்ளன. இவை வணிகர்களின் குடியிருப்புகளைக் குறித்து அமைந்துள்ளன.[22] தாதாபுரம் என்ற ஊர் இராஜராசோழன் பெயரால் ஏற்பட்ட ஊர் ஆகும். இராஜராஜபுரமே நாளடைவில் தாதாபுரம் என மருவியது என்பார் முத்து எத்திராசன் அவர்கள். விட்லாபுரம், கிராண்டிபுரம், வைரபுரம் போன்ற பெயரில் ஊர்களும் உள்ளன.