புனவாசல் என இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சம்பந்தரும், சுந்தரரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
கண்டலு ஞாழலும் நின்று பெருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயில் (269-2)
என்றும்,
நரல் சுரி சங்கொடு மிப்பியுந்திந் நலமல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறியும் புனவாயிலே (269.9)
என்றும் சுட்டும் நிலையில் இன்றும் கடற்கரையில் அமைந்திருக்கும் இத்தலம் பற்றிய எண்ணம் தெளிவுப்படுகிறது. மேலும் இவர் பாடலடிகள் புனவாயில் என்பது புன்னைவாயில் என்பதன் சுருங்கிய நிலையே என்பதையும் நமக்கு உணர்த்தும் நிலையில் அமைகின்றன.
அன்ன மன்னந் நடையாளொடும் மமரும்மிடம்
புன்னை நன் மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே (269-1)
இங்குப் புன்னை மரங்கள் பற்றிய எண்ணத்தைத் தருகின்றார் சமபந்தர். கடற்கரைப் பகுதிகளில் புன்னை மரங்களின் மிகுதி பற்றி, சங்க இலக்கியத்திலும் காட்டுகள் உண்டு. தலவிருட்சம் புன்னை மரம் என்பதும் இக்கருத்துக்கு அரண் ஆகின்றது. எனவே புன்னை மரங்களின் மிகுதி காரணமாகவே இவ்விடம் புன்ன வாயில் எனச் சுட்டப்பட்டிருக்கும் என்பது பொருத்தமாக அமைகிறது. மேலும் இவ்விடம் முன்னரேயே இருந்திருக்கிறது என்பதும், சிவன் கோயில் காரணமாகச் சிறப்பு அடைந்திருக்கிறது என்பதும், சுந்தரர்,
பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி
பொத்திலாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே
என்று பாடும் தன்மையுணர்த்தும். பழம்பதி என்ற கூற்று இவண் இதன் பழனமயை உணர்த்தவல்லது. புனவாயிலுக்குப் பழம்பதி. விருத்தபுரி என்ற பெயர்கள் உண்டென்பது தெரிகிறது. பழம்பதி’ இதன் முதுமையைக் குறித்த நிலையில் சுந்தரர் பாடலுக்குப் பின்னர் இப்பெயர் பெற்றதோ எனவும் சிந்திக்கலாம். சிவனார் மன்னும் ஒப்பரிய புனவாயில், என்கின்றார் சேக்கிழார் (34-91-4).