புத்தூர்

திருப்பத்தூர் என்று வழங்கப்படும் ஊர் இராமநாதபு மாவட்டத்தில் உள்ளது. கோயில் திருத்தளி என்று சுட்டப்படுகிறது. புதியக் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் பெயர் பெற்ற நிலையை இவ்வூர்ப் பெயர் தெளிவாகக் காட்டுகிறது.
மாடேறி முத்தீனும் கானல் வேலி மறைக்காட்டு மாமணி
காண் வளங் கொண் மேதி
சேடேறி மடுப்படியும் திருப்புத்தூர் – (திருஞான – 290-4)
அந்தண் கானல்,
செறிபொழில் சூழ் மணிமாடத் திருப்புத்தூர் (290-7)
இதனைக் காண்டகைய திருப்புத்தூர், என்கின்றார் சேக்கிழார் (27-402-3). புதிய குடியிருப்பினைப் புத்தூர் என்று வழங்கும் நிலை தமிழர்களிடம் பரவலாக அமைந்த ஒரு நிலை என்பதைப் பிற புத்தூர் பற்றிய எண்ணங்கள் தருகின்றன (வடஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு புத்தூர் உள்ளது). மேலும் திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் உள்ள மணம் தவிர்ந்த புத்தூர் கிராமமும் இவண் சுட்டத்தக்கது. இதன் முதல் பெயர் புத்தூர் என்பதும், இறைவன் தடுத்தாண்டமை காரணமாக மணம் தவிர்ந்த புத்தூர் என்றாயிற்று என்பதையும் வரலாறு தருகிறது (6-23 ; 6:72).