புணரியல்

இது தொல்காப்பிய எழுத்துப்படலத்து நான்காம் இயல்; 40 நூற்பாக்களைஉடையது. இதன்கண், எல்லாச் சொற்களும் உயிரீறு புள்ளியீறு இவற்றுள்அடங்கும் என்பதும், குற்றிய லுகர ஈறு புள்ளி யீற்றுள் அடங்கும்என்பதும், உயிர்மெய்யீறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும், மெய்யீறுகள்எல்லாம் புள்ளி பெறும் என்பதும், மெய்ம் முதல்கள் எல்லாம் உயிரொடுகூடி உயிர்மெய் முதலாகும் என்பதும், மெய்ம்முதல் உயிர் முதல் என்பனமெய்யீறு உயிரீறு என்பவற்றொடு புணரும் என்பதும், பெயரொடு பெயரும்தொழிலும் தொழிலொடு பெயரும் தொழிலும் புணருமிடத்து இயல்பே யன்றித்திரிபும் நிகழும் என்பதும், அத்திரிபானது மெய்பிறி தாதல் – மிகுதல் -குன்றல் – என்ற மூன்றனுள் அடங்கும் என்பதும், நிலைமொழியும்வருமொழியும் அடையொடு கூடியும் புணரும் என்பதும், புணர்ச்சிவேற்றுமைப்புணர்ச்சி யும் அல்வழிப்புணர்ச்சியும் என இருவகைப்படும்என்பதும், எழுவாய்த்தொடரும் விளித்தொடரும் அல்வழியாகும், இரண்டாம்வேற்றுமைத்தொடர் முதல் ஏழாம் வேற்றுமைத் தொடர் ஈறாக ஆறுமே வேற்றுமைப்புணர்ச்சியாகும் என்ப தும், புணர்ச்சிக்கண் கு – கண் – அது – என்றஉருபுகள் பெறும் விகாரம் இவை என்பதும், வேற்றுமைப் புணர்ச்சிக்குநிலைமொழி பெயரே என்பதும், உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பெயரைஅடுத்தும் சாரியை வரும் என்பதும், சாரியைகள் இவை என்பதும், நிலைமொழிவரு மொழிகளுக்கு இடையே வரும் சாரியைகளுள் திரிபுடையன உள என்பதும்,சாரியை பெறாதனவும் உள என்பதும், எழுத்துச் சாரியைகள் இவை என்பதும்,உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்புபுணர்ச்சி என்பதும், மெய்யீறுபோல்வது குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி என்பதும், உடம்படு மெய்உயிரீற்றையும் உயிர்முதலையும் இணைக்க இடையே வரும் என்பதும்,எழுத்துக்கள் ஒன்று பலவாதல் ஒலியானேயே தெளிவாக உணரப்படும் என்பதும்இந்நாற்பது நுற்பாக்க ளால் குறிக்கப்பட்டுள்ளன. (தொ.எ. 103-142.)