பாவைப்பாடல்கள் ஒரே விகற்பத்தனவாகிய நாற்சீரடி எட்டுக் கொண்டபாடல்களாம். இவை வெண்டளையே பெற்று வருவன. பாடல் நிரையசையில்தொடங்கின், மிக அருகி ஈற்றுச்சீர் அடுத்த அடி முதற்சீரோடு இணையுமிடத்தே கலித்தளை வருதலுமுண்டு. நேரசையில் தொடங்குவன வெண்டளை பிறழாமல்வரும். இவை உண்மையில் ஈற்றடி அளவடியாக்கப்பட்ட பஃறொடை வெண்பாக்களேஎனலாம். வெண்பாக்களின் ஈற்றடியும் நாற்சீரடியாக்கப்படும் மரபுதொல்காப்பியத்தில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது (செய். 72 நச்.)பிற்காலத்தார் முழுதும் வெண்டளையாக வரும் இப்பாவைப்பாடலைத் தரவுகொச்சகம் என்று கூறுவா ராயினர். திருவாசகத்தில் வரும் அம்மானைப்பாடல்களும் பாவைப்பாடல் போன்றனவே. நேரசையில் தொடங்கும் அம்மானைப்பாடல் ஈற்றடியும் அளவடியாக நிரம்பிய ஆறடிப் பஃறொடை வெண்பாவே. அதனையும்பிற்காலத் தார் தரவு கொச்சகம் என்ப.பாவைப்பாடல் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிதலும், அம்மானைப்பாடல்‘அம்மானாய்’ என முடிதலும் மரபு.