பாலைத்துறை

திருப்பாலைத் துறை என்று சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் பாலைவனமாக இருந்த காரணத்தால் பாலைத் துறை என்று பெயர் பெற்றது என்பர் பாலை என்பதற்குப் பாலைவனம் எனக் கொண்டால் துறை என்பது மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்களைக் குறிக்கும் நிலையில் அமைந்து இவண் முரண்பாடாக அமைகிறது. எனவே பாலைத் துறைக்கு வேறு அடிப்படை உண்டா எனப் பார்க்க லாம். ஞானசம்பந்தர். இக்கோயிலைப் பாடும்போது ஒரே ஒரு பாடலில்,
குரவனார் கொடு கொட்டியும் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறை (165-7)
பொன்னிப்பாலைத் துறை எனச் சுட்டுவது பொன்னிக் கரையில் இது அமர்ந்திருக்குமோ ? என்ற எண்ணத்தைத் தருகிறது. ஆயின் பாலை என்பது இங்கு எவ்வாறு வந்தது என்பது மேலும் ஐயத்திற்கு இடமாக உள்ளது. பரவிய துறை என்பது பாற்றுறை என்றாகி, பாலைத்துறை ஆயிற்றா என்றே சிந்தனை எழுகிறது.