பாம்பணி மாநகர்

பாமணி, என்றும் பாம்பணி என்றும் வழங்கப்படும் இத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பதஞ்சலி போலப் பாம்புரு உள்ள தனஞ்செய முனிவர் வழிபட்ட தலம் என்பர்.சம்பந்தர் இக்கோயிலைப் பாடுகின்றார். கோயில் பாதாளீச்சரம் எனச் சுட்டப்படுகிறது.
அங்கமு நான் மறையும் மருள் செய்தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயனின்றுகளும் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல் சூழ்ந்த பாதாளே (108-3)
என இக்கோயிலின் சிறப்பு சுட்டுகின்றார் இவர். பாதாள லிங்கம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன், பூமியில் ஆழப் பதிந்த சிவலிங்கம் எனப் பொருள் தருகிறது (பக் -2607). எனவே பாதளீச்சரத்திலும், சிவன் மேற்குறித்த நிலையில் காட்சிதரும் நிலையில் பெயர் பெற்றதோ எனத் தோன்றுகிறது. பாதாளீச்சரம் என்பது கோயில் பெயராக அமைய, பாம் பணி என்ற இன்றைய பெயர் அன்றும் இருந்தது என்பதைப் பெரிய புராணம் சுட்டுகிறது ஆயின் சம்பந்தர் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே பாதாளீச்சரம் என்ற கோயில் செல் வாக்குப் பெற்ற நிலையில், மேற்குறிப்பிட்ட பாம்பு பற்றிய புராணக் கருத்தும் செல்வாக்குப் பெற பாம்பணி நகர் என்ற பெயர் பின்னர் இவ்வூருக்கு அமைந்ததோ என்பது பெரிய புராணத்தில் இப்பெயர் சுட்டும் நிலை காட்டுகிற ஒரு எண்ணம். பருப்பத வார் சிலையார் தம் பாம்பணி மாநகர் தன்னில் பாதளீச்சரம் வணங்கி (பெரிய – கழறிற்- 119, 120)