பாடலி

பாடலி என்னும்‌ சொல்‌ ஒருவகை நெல்லையும்‌, ஒருவகைக்‌ கொடியையும்‌ குறிக்கும்‌. ஆகவே நெல்வளம்‌ மிக்க நகரம்‌ என்ற பொருளிலோ, பாடலி என்ற கொடிவகை நிறைந்த பகுதியில்‌ அமைந்த ஊர்‌ என்ற பொருளிலோ ஊர்ப்பெயர்‌ உண்டாகி இருக்கலாம்‌. மகத தேசத்தின்‌ தலைநகர்‌ பாடலிபுரம்‌. கங்கை சோணை நதிகளின்‌ சங்கமத்தில்‌ அமைந்தது. சோணையின்‌ வடகரையில்‌ அமைந்தது. பாடலி எனவும்‌ வழங்கப்பட்டது. பாடலி, நந்தர்‌ என்னும்‌ சிறப்புமிக்க அரச மரபினருக்குரியது. இந்நகரில்‌ நிதியம்‌ ஓரிடத்தில்‌ குழுமிக்‌ கிடந்து பின்னர்‌ கங்கை நீராலே முழுதும்‌ மறைந்து போயிற்று. பாடலிப்‌ பொன்‌ வினைஞர்‌ பெயர்‌ பெற்று விளங்கினர்‌.
“வெண்‌ கோட்டி யானை சோணை படியும்‌
பொன்மலி பாடலி பெறீஇயர்‌
யார்வாய்க்‌ கேட்டனை காதலர்‌ வரவே” (குறுந்‌ 75;3 5)
“பல்புகழ்‌ நிறைந்த வெல்போர்‌ நந்தர்‌
சீர்மிகு பாடலிக்‌ குழிஇக்‌ கங்கை
நீர்முதற்கரந்த நிதியங்‌ கொல்லோ” (அகம்‌ 265;4 6)
”பாடலிப்‌ பிறந்த பசும்பொன்‌ வினைஞரும்‌” (பெருங்‌ 1:58:42) (தென்‌ ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்‌ புலியூருக்கும்‌ இப்பெயர்‌ உண்டு. ஆனால்‌ இங்குக்‌ குறித்துக்‌ கூறப்‌ பெற்றுள்ள ஊர்‌ அதுவல்ல)