பழமொழி

பழமொழி paḻmoḻi, பெ. (n.)

   1. முதுசொல்; மக்களிடையே நீண்டகாலமாக வழங்கிவருவதும், பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் சான்றாகக் காட்டப்படுவதுமான கருத்துத் தொடர்; proverb, maxim.

     “பழமொழியும் பார்த்திலிரோ” (கம்பரா. சூர்ப்ப. 139.);

   2. பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்றும், முன்றுறை யரையனார் இயற்றியதும் ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வொரு பழமொழியுடன் கூடியதாய் அறநெறி கூறுவதும் 400 செய்யுட்கள் கொண்டதுமான நூல்; an ancient didactic work of 400 stanzas, by {nunruraiy-araiyanar} each explaining a principle of conduct by means of a proverb, one of {patinen-kil-k- kanakku} q. v

     [பழமை + மொழி]

மறுவ: பழமொழி நானூறு,

பழமொழிகள் பெரும்பாலும் அறவுரைகளையும் அறிவுரைகளையும் கொண்டிருக்கும். அவற்றுள் பல ஒதற்கு எளியனவாயும் உணர்தற்கு அரியனவாயும் அமைந்திருக்கும்.

எழுத்தறிவுக்கு இயற்கை அறிவு இளைத்த தில்லை என்பதைப் பழமொழிகள் பறைசாற்று கின்றன. வாழ்க்கைப் பாதையில் நெருக்கடி நேரங்களில் அனைவருக்கும் கைவிளக்காக இவை பயன்படுகின்றன.

பழமொழிகளை உரையிலும் பாட்டிலும் அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். பழமொழிகள் எப்போதோ யாராலோ உண்டானவை. எனினும் இவற்றை அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறர்கள். அதுவே இதன் சிறப்பு. பல சொல்லியும் விளக்க முடியாத பல உண்மை களைப் பழமொழிகளால் எளிதில் விளக்க இயலும். உள்ளத்தின் உணர்ச்சிகளையும் பழ மொழிகளால் எளிதில் எடுத்துக்காட்ட முடியும் என்பது கற்றாரும் கற்றாரினும் கல்லாரும் பேகம் பேச்சால் உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கும். பழமொழிகளின் மிகு பழந்தொகுப்புகவை, ஒன்று மறையாகவும் மதிக்கப் பெற்று திருநூலில் (பைபிளில்); இடம் பெற்றிருத்தல் இங்குக் குறிப்பிடத் தக்கது.

பலநாட்டுப் பழமொழிகளையும் பொறுக்கி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி ஆராய்வது இன்பந் தரும் இலக்கியப் பணியாகும். மொழி ஒலிகள் வேறுபட்டாலும் மக்கள் நிறங்கள் வேறுபட்டாலும் சிறந்த சில பொதுவான

உண்மைகள், மாந்தர் உள்ளத்து எழும் உணர்ச்சிகள் ஆகியவை உலகத்துக்கே பொது என்பதை இவ்வாராய்ச்சி உறுதி செய்யும். அஃதுடன் பன்னாட்டுப் பழமொழிகள் அவ்வந்நாட்டிற்கே உரிய இலக்கியம், சமயம், மரபுகள் ஆகியவற்றை ஒருவாறு அறியவும் இடங் கொடுக்கின்றன.

சிற்சில சமயம் மொழி ஆய்வுக்குப் பழமொழிகள் துணைபுரிவதுண்டு. சில பழமொழிகளைக் கொண்டு மொழியின் பேச்சுவழக்கு, திசைச்சொல் கலப்பு, கிளைமொழிகள், வழக்கிறந்த சொற்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளுகின்றேம்.

தமிழினத்தவரைப் போன்ற மிகப் பழையதொரு மக்கள் குமுகாயத்தில் பழமொழிவளம் சிறந் திருப்பது இயல்பே. பழமொழிகளின் சிறப்பு நோக்கியப் படைப்புகளில் பழமொழி நானூறு ஒன்றாகும். உலகம் புகழும் தமிழ் மறையாகிய திருக் குறளோடு சேர்த்துப் பதினெண் கீழ்க்கணக்கு களில் ஒன்றாகப் போற்றப் பெறுவதும் பழமொழி நானூறு என்னும் நூலே.

   தமிழ்ப் பழமொழிகளில் எத்தனையோ வகை யுண்டு;அவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள் பற்றியும் எடுத்துரைக்கும் பழமொழிகள் நிலவுவதைக் காணலாம். பொய் யாமொழிகளாகவும் அழியா மொழிகளாகவும் விளங்கும் அவை காலங்கடந்தவை.

பழமொழிகள் சில கால அடைவில் இலக்கிய மொழிகள் ஆவதும் இலக்கிய மொழிகள்கால அடைவில் பழமொழிகள் ஆவதும் இயற்கை. பாட்டுலகில் பாடவேறுபாடு இருப்பதுபோலவே பழமொழி உலகிலும் உண்டு. சாதி, சமயம், தொழில், வட்டாரம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேச்சுத்தமிழ் வேறுபடுவது போலவே பழமொழிப் படைப்பிலும் வேறுபாடு விளங்கக் காணலாம். சில பழமொழிகள் தம் உண்மை உருவம் திரிந்து உலாவலும் உண்டு. இழிந்த பழமொழிகளும் உள.

ஆறாயிரம் தமிழ்ப் பழமொழிகளை ஆங்கில மொழியாக்கத்துடன் முதன் முதல் 1874-ல்

பெருசிவல் வெளியிட்டார். அதன்பின் 1887-ல் சென்சர் எருமன் 3,644 தமிழ்ப் பழமொழி களை ஆங்கில மொழியாக்கத்துடன் பாகு படுத்தி வெளியிட்டார். அதன் பின் தமிழ்ப் பழமொழிகள் பெருந் தொகுப்பு ஒன்றை 1894இல் அப்பர் இலாராக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினர். அவர்

     “தமிழ்ப் பழமொழிகள் தமிழ் மக்களின் மெய்யறிவுக் களஞ்சியம்” என்று புகழ்ந்துள்ளார். பல துறைப்பட்ட பழமொழி களுள் சிலவற்றை இங்குக் காண்போம்:

அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.

   அரசன் எவ்வழி;குடிகள் அவ்வழி.

அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

ஏணிமேல் ஏறியவன் இறங்கத்தானே வேண்டும்.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.

கல்லாடம் கற்றவனிடம் சொல்லாடாதே.

குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்ததாம்.

கெட்டிக்காரன் சந்தைக்குப் போனால் கொடுக் கவும் மாட்டான், கொள்ளவும் மாட்டான்.

தவத்திற் கொருவர், தமிழுக்கிருவர்.

தன் கையே தனக்குதவி.

தோட்டிபோல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும்.

   நெய்யை உருக்கு;மோரைப் பெருக்கு.

ஆவைவிட்டுவிட்டு எருதைக் கறக்கலாமா?

படிக்கிறது இராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்,

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.

   வைது கெட்டாருமில்லை;வாழ்த்தி வாழ்ந் தாருமில்லை.

தில்லிக்குப் பாட்சா ஆனாலும் தள்ளைக்குப் பிள்ளை தானே.

   துயரத்தைச் சொல்லி ஆற்றவேண்டும்;கட்டி யைக் கீறி ஆற்ற வேண்டும்.

தென்னை மரத்திலே தேள் கொட்டிற்றாம், பனைமரத்திலே நெறிகட்டியதாம்.

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத்துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடில்லை.