பழனம்

திருப்பழனம் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர் திருவையாற்றுக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ளது. சைவ அடியார் மிகவும் விரும்பிய தலம் என்பதைப் பலரின் பாடல்களும் உணர்த்துகின்றன. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையில் அதன் ஆசிரியர்,
குருகினம் சென்றிடறும் கழனிப் பழனத்தரசை (28)’
என்று போற்றுகின்றார்.
பாங்கார் பழனத் தழசா போற்றி என்கின்றார் மாணிக்க வாசகர் (திரு – போற்றித். 157).
திருவையாற்றுக்கு அருகில் உள்ள சிவன் கோயில் வயல்களின் நடுவே அமைந்திருந்த காரணத்தால், இதனைப் பழனம் என்றே சுட்டினர் எனக் கருதலாம். பின்னர் இதனைப் பழவனம் எனக் கருதிய காரணமோ பிறவோ, இதனைக் கதலிதனம் என்றும் (கதலி -வாழையின் ஒரு வகை) சுட்டினர் என எண்ணத் தோன்றுகிறது.
நல மஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
பலவின் கனிகள் திரைமுன் சேர்க்கும் பழனநகராரே (திருஞான – 67-5)
பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – (திருநா -149-1)
வாளை பாய் புனற் பழனத் திருப்பழனம் மருங்கணைந்து (பெரிய – திருநா -199)
போன்ற பாடல்கள் பழனத்தின் வளத்தினைக் காட்டவல்லன வாக அமைகின்றன.