பறம்பு

பறம்பு என்பது ஒரு மலையின்‌ பெயர்‌. அம்மலையையுடைய நாட்டிற்கும்‌ பெயராயிற்று, பறம்பு நாடு 300 ஊர்களை உடையது. இது பாரி என்ற மன்னனின்‌ ஆட்சியில்‌ இருந்த நாடு. பறம்பு மலை திருப்பத்தூர்‌ வட்டத்திலுள்ளது. மதுரைக்கு வடகிழக்கில்‌ சுமார்‌ பத்து மைல்‌ தொலைவில்‌ உள்ள திருமோகூர்‌ என்னும்‌ ஊரிலுள்ள ஒரு கல்வெட்டு, அவ்வூரை தென்பறம்பு நாட்டில்‌ இருமோகூர்‌ என்று குறிக்கிறது. எனவே திருமோகூரைச்‌ சுற்றியுள்ள பகுதி, பாரியின்‌ ஆட்சிக்குட்‌பட்ட பறம்பு நாட்டின்‌ தென்பகுதியாய்‌ இருக்கவேண்டும்‌. இராமநாதபுர மாவட்டத்தின்‌ பரமக்குடி என்னும்‌ ஊர்ப்‌ பெயர்‌ பறம்புக்குடி என்னும்‌ பெயரின் மருவிய வழக்கே என்பது உண்மையானால்‌ பறம்பு நாட்டின்‌ தென்‌ எல்லையாகப்‌ பரமக்குடியைக்‌ கொள்ளலாம்‌. பறம்புமலை உள்ள திருப்பத்தூர்‌ வட்டத்திற்குத்‌ தெற்கே சிவகெங்கை வட்டமும்‌, அதற்கும்‌ தெற்கே பரமக்குடி வட்டமும்‌ உள்ளன. எனவே சங்ககாலப்‌ பறம்புநாடு என்பது ஏறத்தாழ மதுரை மாவட்டத்து மேலூர்‌ வட்டத்தின்‌ கிழக்குப்‌ பகுதியும்‌, இராமநாதபுர மாவட்டத்துத்‌ திருப்பத்தூர்‌, சிவகெங்கை, பரமக்குடி வட்டங்களும்‌ அடங்கி‌ய நிலப்பரப்பாய்‌ இருந்திருக்கலாம்‌ என்று கூறுதல்‌ பொருத்தமாகும்‌. “நன்னன்‌ பறம்பு” என்‌ற ஒரு தொடர்‌ சங்க இலக்கியத்தில்‌ இடம்‌ பெற்றுள்ளது. நன்னனின்‌ முக்கிய நகரமாகிய பாரம்‌ என்ற ஊரையடுத்துள்ள பறம்பு நிலமே பறம்பு எனக்‌ கூறப்பெற்‌றுள்ளது. என்ற கருத்தை நாம்‌ ஏற்றுக்‌ கொண்டால்‌ பறம்பு மலையும்‌ நாடும்‌ பாரியின்‌ தொடர்புடையனவேயன்றி கொண்‌ கான நன்னனுக்கும்‌ இந்நாட்டிற்கு ஒரு தொடர்பும்‌ என்று துணியலாம்‌. இன்று பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. நன்னன்‌: “தொன்னசை சாலாமை, நன்னன்‌ பறம்பில்‌
சிறுகாரோடன்‌ பயினொடு சேர்த்திய
கற்போல்‌ நாவினேனாகி (அகம்‌, 356:8 10)
பாரி; “பிறங்கு வெள்ளருவி வீழுஞ்சாரற்‌
பறம்பிற்‌ கோமான்பாரியும் (பத்து, சிறுபாண்‌ 90 91)
பாரிபறம்பிற்‌ பனிச்சுனைத்தெண்ணீர்‌ (குறுந்‌. 196:1)
“புலம்‌ கந்தாக இரவலர்‌ செலினே,
வரை புரைகளிற்றொடு நன்கலன்‌ஈயும்‌
உரைசால்‌ வண்புகழ்ப்‌ பாரி பரம்பின்‌” (அகம்‌ 303:8 10)
“அளிதோதானே பாரியது பறம்பே
நளிகொள்‌ முரசின்‌ மூவிரும்‌ முற்றினும்‌
உழவர்‌ உழாதன நான்கு பயனுடைத்தே” (புறம்‌ 109:1 3)
“கடந்து அடுதானை மூவிரும்‌ கூடி
உடன்றனிர்‌ ஆயினும்‌ பறம்பு கொளற்கு அரிதே” (ஷே. 110:1 2
“கூர்வேல்‌ குவைஇய மொய்ம்பின்‌
தேர்வண்பாரி தண்பறம்பு நாடே” (ஷே. 118:4 5)
“ஊருடன்‌ இரவலர்க்கு அருளி, தேருடன்‌
முல்லைக்கு ஈத்த செல்லா நல்‌இசை
படுமணி யானை பறம்பின்‌ கோமான்‌ நெடுமாப்பாரி…………” (௸. 201:2 5)