இன்று பருத்தியப்பர் கோயில் எனச் சுட்டப்படும் இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. பருதி நியமம் என்ற பெயர் சூரியன் கோயில் என்ற பொருள் கொண்டது எனவே சிவனுக்கு கோயில் எழுமுன்னே அங்கு மக்கள் சூரியனை வழிபட்டு இருக்கலாம். எனவே அப்பெயரால் அவ்வூரைக் குறிப்பிட்டு இருக்கலாம். நாளடைவில் சிவன் கோயில் செல்வாக்கு பெற அங்குள்ள கோயில் இறைவன் பரிதியப்பர் என்று சுட்டப்படுகின்றார். இன்றும் இறைவன் பெயர் பரிதியப்பர் என்ற எண்ணம் காண்கின்றோம். இப்பருதியப்பர் கோயிலே இன்று பருத்தியப்பர் கோயிலாக மருவி அமைந்து விட்டது என்பது தெளிவான உண் மையாக அமைகிறது. இக்கோயிலை, சம்பந்தரின் பாடல் புகழ்கிறது. பிற சூரியனார் கோயில் பற்றிய எண்ணமும் இது சூரியனுக்குரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்பதைத் தெளிவு படுத்துகிறது.