திருப்பராய்த்துறை என இன்று அழைக்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். இது மாணிக்கவாசகரும் இத்துறை இறைப் பற்றி பாடுகிறார். (பராய்த்துறை மேவிய பரனே போற்றி -திருவா -போற்றித்-153) நாவுக்கரசர். இத்தலம் பற்றி பாடும் போது.
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்பராய்த்துறை மேவிய செல்வரே (144-1)
எனச் சொல்லும்போது காவிரியின் தென் கரைத்தலம் இது என்பது தெரிகிறது. இன்றும் காவிரியின் தென்கரைத் தலமாக திருப்பராய்த்துறை இருப்பது நாவுக்கரசர் கருத்துக்குத் தெளிவு அளிக்கிறது. எனவே காவிரியின் தென் கரைத்துறையில் அமைந்த பரவுமிடம் என்ற நிலையில் சிவன் கோயிலைக் குறிப்பிட்ட பராய்த்துறை பின்னர் அந்த இடத்திற்கும் பெயராகியிருக்கும் எனத் தோன்றுகிறது. எனின், விருட்சம் பராய் விருட்சத்தால் இத்தலத்திற்குப் பெயராயிற்று என்ற எண்ணம் காணும்போது பராய் என்ற தாவர வகையைப் பற்றிய எண்ணம் சிறப்பாகத் தெரியவில்லை. தமிழ் லெக்ஸிகன், பராய் – மரவகை (Paper tree) என மட்டும் கூறுகிறது. எனவே இதனைப்பற்றிய பிற விளக்கங்கள் கிடைத்தால் மட்டுமே இவ்வெண்ணத்திற்கு உறுதி கிடைக்கும்.