பரங்குன்று

திருப்பரங்குன்றம் என்ற பெயரால் அழைக்கப்படும் ஊர். மதுரை மாவட்டத்தில் அமைகிறது. பண்டு தொட்டே புகழ் மிக்கது. முருகனின் அறுவடை வீடுகளுள் ஒன்று. இதனைத் திரு முருகாற்றுப்படை,
மாடம் மலி மறுகின் கூடற்குடவயின்
இருஞ்சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாட் தாமரைத்துஞ்சி…..
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் (71-77)
என மதுரைக்குக் குடபகுதியில் இருக்கும் நிலையையும் இப்பரன் குன்று குன்று என்றே சுட்டப்பட்ட நிலையையும் உரைக்கிறது. இங்கு முருகன் குடிகொண்ட நிலையை அகநானூறும்,
சினம் மிகு முருகன் தண்பரம் குன்றம் (59 : 10-11)
என்று தருகிறது. எனவே பரன் குன்று என்ற நிலையில் தலைவன் தன்று என்று பெயர் பெற்றது எனலாம். சங்கக்காலத்துச் சுட்டப்படவில்லை எனினும் பிற்காலத்தில் இங்குச் சிவன் கோயி லும்காணப்பட்டது என்பதைத் தேவாரப் பாடல்கள் காட்டுகின்றன.
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் -திருஞா 175-2
பரங்குன்று மேயான் தன்னை – திருநாவு – 248-3
பரங்குன்று மேயபரமன் – சுந்-2-11
மேலும்,
வளர் பூங்கோங்க மாதவியொடு மல்லிகைக்
குளிர் பூஞ்சாரல் வண்டறை சோலைப் பரங்குன்றம்
தளிர் பொன் மேனித் தைய னல்லா ளொடொருபாகம்
ஒளிர் பூங்கொன்றை சூடினள் மேயநகர் தானே (திருஞான – 100-4)
என்பது சிவன் நயந்த இடம் என்பதைத் தெளிவாகத் தருகிறது. முருகன் சிவபெருமானை இங்கு வழிபட்டார் என்ற கருத்து அமைகிறது. எனினும் சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இல்லை ஆகையால். பின்னர் சிவன் கோயில் எழுந்த பின்னர் மக்கள் கொண்ட எண்ணம் இது எனக் கருத முடிகிறது.