பனையூர்

திருப்பனையூர் என்ற இத்தலம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பனை காரணமாக எழுந்த இன்னொரு ஊர்ப் பெயர். தலமரமும் பனையாக அமைகிறது. திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் என மாணிக்கவாசகர் வாசகம் இவ்வூரைச் சுட்டுகிறது (கீர்த் -87). சம்பந்தர், சுந்தரர் இருவரும் இத்தலத்தைப் பாடுகின்றனர்
கண்ணின் றெழு சோலையில் வண்டு
பண்ணின் றொலி செய் பனையூரே (37-2)
பொலறயார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலி செய் பனையூரே (37-5)
என, சம்பந்தரும்,
மாடமாளிகை கோபுரத் தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர் (87-1)
நாறு செங்கழு நீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத் தொடு
சேறு செய்கழனிப் பழனத் திருப்பனையூர் (87-2)
செங்கண் மேதிகள்.சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத் தொடு
பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப்பனையூர் (87-3)
என, சுந்தரரும் இவ்வூர் வளம் பாடுகின்றனர்.
சேக்கிழார் வள மல்கிய சீர்த் திருப்பனையூர் (ஏயர்.54) எனக் காட்டுகின்றார்.