பத்து என்பதன்முன் ஒன்று முதல் பத்து ஈறாகிய எண்ணுப் பெயர்களும்,ஆயிரம் கோடி என்ற எண்ணுப் பெயர்களும், நிறைப்பெயர் அளவுப்பெயர்களும்,பிற பெயர்களும் வந்து புணருமிடத்து, நிலைமொழியீற்று உயிர்மெய் கெட,இன்னும் இற்றும் ஆகிய சாரியைகளுள் ஏற்றதொன்று இடையே வரும்.வருமாறு : பதினொன்று, பதின்மூன்று, பதினாயிரம், பதின் கழஞ்சு,பதின்கலம், பதின்மடங்கு – இன்சாரியை பெற்றுப் புணர்ந்தன.பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி,பதிற்றுத்தூணி – இற்றுச் சாரியை பெற்றுப் புணர்ந்தன.இவ்விதி ஒன்பது என்னும் நிலைமொழிக்கும் பொருந்தும்.வருமாறு : ஒன்பதினாயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம்,ஒன்பதின் மடங்கு; ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்றுக்குறுணிபத்துக்கோடி, ஒன்பது கோடி எனச் சாரியை பெறாது இயல் பாக முடிதலும்கொள்க. (நன். 197)