ஆசிரியர் பன்னிருவரால் பாடப்பெற்ற நாற்பது பிரபந்தங் களதுதொகுப்புப் பதினோராம் திருமுறை. திருவாலவா யுடையார் அருளியதிருமுகப்பாசுரம் நேரிசை ஆசிரியப் பாவாம். நக்கீரர் அருளியதிருமுருகாற்றுப்படையும் அது. இரட்டைமணிமாலை நான்கும் மும்மணிக்கோவைமூன்றும், கோயில் நான்மணிமாலை ஒன்றும் என்னுமிவை வெண்பா, கட்டளைக்கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பால் இயன்றன.எழு கூற்றிருக்கை ஆசிரியப் பாவாம். உலா ஒன்றும் கலிவெண்பா யாப்பிற்று.கலம்பகம் ஒன்றும் பலவகைப் பாவும் பாவினமும் விரவ இயன்றது.காரைக்காலம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும்ஆசிரியவிருத்த யாப்பின; பண்ணோடு பாடப்படும் நடையின. அவர் அருளியஅற்புதத் திருவந்தாதி 101 வெண்பாக்களால் மண்டலித்தமைய இயன்றது.ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திரக் கோவை தற்போது 24வெண்பாக்களாகவே எஞ்சியுள்ளது. சேரமான்பெருமாள் நாயனார் அருளியபொன்வண்ணத்தந்தாதிக் கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது.நக்கீரர் அருளிய வற்றுள் கைலை பாதி காளத்திபாதி அந்தாதி 100 வெண்பாக்களால் அமைந்தது; திரு ஈங்கோய் எழுபது, எழுபது வெண் பாக்களால் இயன்றது;பெருந்தேவபாணி 67 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கோபப் பிரசாதம் 91அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கார் எட்டு எட்டு வெண்பாக்களான் இயன்றது;திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 157 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா. இனிக்கல்லாட தேவ நாயனார் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடினார்; 38அடிகளால் அமைந்த ஆசிரியப்பா அது. கபிலதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான்திருவந்தாதி ‘ஒன்று, முதலாகத் தொடங்கி ‘ஒன்று’ என முடியும் 100வெண்பாக்களால் இயன்றது. பரணதேவ நாயனார் அருளிய சிவபெருமான்திருவந்தாதி யும் 100 வெண்பாக்களால் ஆயது. பட்டினத்துப் பிள்ளை யார்அருளிய திரு ஏகம்ப முடையார் திருவந்தாதி கட்டளைக் கலித்துறை நூறுகொண்டு அமைந்தது; திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பத்து ஆசிரியப்பாவால்அந்தாதித் தொடை பெற அமைந்தது. நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில்திருப்பண்ணியர் விருத்தம் எழுபது கட்டளைக் கலித்துறையான் அந்தாதித்துஅமைந்தது; திருத்தொண்டர் திருவந்தாதி 89 கட்டளைக் கலித்துறைப் பாடலால்அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100 கட்டளைக்கலித்துறையான்இயன்றது; ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 10 கட்டளைக்கலித்துறையான் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பேதைமுதலாகிய ஏழு பருவத்து மகளிரைத் தனியே பிரித்துக் கூறாது, பொதுவாக,மகளிர் காமுறாநிற்கத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருஉலாப் போந்ததன்மையைச் சுட்டிக் கலிவெண்பா யாப்பால் இயன்றது (மாலை-தன்மை); ஆளுடையபிள்ளை யார் திருத்தொகை 65 அடிகளான் இயன்ற கலிவெண்பா;திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதச மாலை 11 ஆசிரிய விருத்தப் பாக்களான்இயன்றது.பிற பிரபந்தங்கள் தத்தம் பெயராலே யாப்புத் தோன்ற நின்றன.(இலக்கணத். முன். பக். 89-92)