நோய்நாடு-தல் nōynāṭudal, 5.செ.குன்றாவி. (v.t.)
நோய் இன்னது என்று கண்டுபிடித்தல்; diagnosis.
“நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள்,948);
[நோய்1 + நாடு-தல்]
நோயாளியைப் பார்த்தவுடன் அவருக்கு என்னென்ன தொந்தரவுகள் என்று அறிந்துகொண்டு, அதிலிருந்து ஒவ்வொரு நோயாக விலக்கிக் கொண்டே வந்து, எந்தநோயின் தன்மையும் அவர் சொல்லும் தொந்தரவும் ஒத்து வருகின்றனவோ அந்த நோயே அவருக்கு இருக்கலாம் என்ற உறுதி செய்வது நோய் நாடலாகும்.
எடுத்துக்காட்டாக வயிற்றுவலி என்றால், வயிற்றில் புண்ணாக இருக்கலாம்; குடலில் புண்ணாக இருக்கலாம்; ஈரலைச் சேர்ந்த நோயாக இருக்கலாம்;இதய நோயாகவும் இருக்கலாம். சாப்பிட்ட உடனே அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது இரண்டுமணி நேரத்திற்குள்ளேயே வயிற்று வலி வந்தால் அது வயிற்றுப் புண்ணாகவோ, அல்லது குடற்புண்ணாகவோ தான் இருக்கவேண்டும். ஏனெனில் மற்ற உறுப்புக்களின் நோய், உணவால் அதிகப்படுவதில்லை. மற்றும் வாந்தி எடுத்தவுடன் வலி அடங்கிவிடுகிறது என்றால் குடல்நோய் என்றே கூறவேண்டும். அதிலும் காரப்பொடி சாப்பிட்டால் வலி எற்படவில்லை என்றால் இந்த ஊகம் உறுதிப்படுகிறது. ஆனால், நோய்க் கூற்றைக் கண்டுபிடிப்பதற்கு நோயாளியின் தொந்தரவுகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அதோடு நோய் எப்போது ஏற்பட்டது, நோய் எவ்வளவு நாட்களாக இருந்து வருகிறது. என்ன பண்டுவத்தால் குணம் ஏற்படுகிறது என்றும்,
எந்தெந்த மருந்துகளால் நோய் அதிகமாய்த் தோன்றுகிறது என்றும் அறிந்து கொள்ளவேண்டும். நோயாளி தன்னுடைய உடம்பின் நிலையைப் பற்றிச் சொல்லி நிறுத்திய பிறகு, ஆய்வு செய்யவேண்டும். நோயாளியின் தொல்லை என்னவாக இருந்தாலும் உடல் முழுமையும் ஆய்வு செய்வதே நல்லது.