நோக்கு

நோக்கு1 nōkkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. கூர்ந்து பார்த்தல்; to see, look at, behold, view.

     “நோக்கினாள் நோக்கெதிர்நோக்குதல்” (குறள்,1082);.

     “நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா” (தொல்,சொல்.வேற்று.11);.

எத்திசையில் நோக்கினும் பச்சைப் பசேலென்ற வயலைக்காணமுடிகிறது. அவள்தலை நிமிர்ந்து என்னை நோக்கினாள்.

     “யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்” (குறள்,1094);.

   2. சிறப்பாய்க் கருதுதல்; to consider, reflect.

     “அறனோக்கி யாற்றுங்கொல் வையம்” (குறள்,189);.

     “ஒன்று நோக்கலருன் வலியோங்கறனின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்” (கம்பரா. கரன்.5);.

   3. கவனத்தில்; to regard, pay attention to.

     “நச்சாமை நோக்காமை நன்று” (ஏலாதி.12);.

கட்டுரை ஆசிரியரின் மொழிநடையை நோக்கும்போது என்னதோன்றுகிறது?

   4. கவனித்துத் திருத்துதல்; to arrange, put in order.

     “புனையிழை நோக்கியும்” (கலித்.76);.

   5. காத்தல்; to keep product, save.

     “நோக்காது நோக்கி” (சி.போ. 1:4, வெண்.பக்.79);,

   6. கவனித்துச் செய்தல்; to do, perform.

     “இவற்றை மும்மைசேர் யாண்டு நோக்கு” (திருவாலவா.34:15);.

   7. ஒத்தல்; to resemble.

     “இந்துநோக்கிய நுதலியை” (கம்பரா.சூர்ப்ப96);.

   8. ஒப்பிட்டுப் பார்த்தல்; to compare.

அவனை நோக்க இவன் நல்லவன்.

   9. படித்தல்; to read.

     “இறைவன் கொண்டாங்கது நோக்குமே” (சீவக.2586);.

   10. விரும்புதல் (யாழ்.அக.);; to desire.

   11. அணுகுதல்; approach.

எந்தச் செய்தியையும் பொறுமையாக நோக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையில் இப்பாடலை நோக்குவோம்.

   ம. நோக்குக;க. நோடு, இ. தேக்.

     [நுல் (=கூர்மை); → நுள் → நொள் → நோள் → நோட்கு → நோக்கு → நோக்கு-தல் (வே.க.);]

     [நொள் → நொழு → (நொழுகு); → நோக்கு → நோக்கு-தல் (க.வி.45);]

 நோக்கு2 nōkkudal,    5 செகுன்றாவி. (v.t)

   1. கண்காணித்தல்; to supervise.

     “இம்மடம் நோக்கும் திருமேனிக்கு” (தெ.க.தொ4.17);.

   2. நுழைந்து பார்த்தல்; to peep in or into to put the head in and look.

   3. நுட்பமாய்ப் பார்த்தல்; to see minute.

   4. அகக்கண்ணால் பார்த்தல்; to see inner eyes.

     [நோக்கு1-தல் → நோக்கு2-தல்.]

 நோக்கு3 nōkku, பெ. (n.)

   1. நோக்குங் கண்; looking eye.

     “மலர்ந்த நோக்கின்” (பதிற்றுப்.657);.

   2. கருத்தோடு கூடிய பார்வை;   கண்ணோட்டம்; look, sight;

 point of view.

     “செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்” (நாலடி,298);.

உலகநோக்கு அவர்கவிதையில் இல்லை.

     “கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது” (குறள்,1092);.

     “யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்” (குறள்,1094);.

   3. சிறப்பாகப் பார்த்தற்கேற்ற அழகு; beauty.

     “நோயிகந்து நோக்கு விளங்க” (மதுரைக்.13);.

   4. சிறந்த கருத்து; meaning, intention.

     “நூலவர்நோக்கு” (திரிகடு,29);.

   5. கூரிய அறிவு; knowledge.

     “நுழைந்த நோக்கிற்கண்ணுள் வினைஞர்” (மதுரைக். 517);.

   6. சிறப்பாகக் கருதற்கேற்ற பெருமை; greatness.

     “நோக்கிழந்தனர் வானவ ரெங்களால்” (கம்பரா. கும் பக.328);.

   7. சிறந்தநடை; mode, style.

     “சொன்னோக்கும் பொருணோக்கும்” (அட்டப். திருவரங்கக். தனியன்,2);.

   8. வேடிக்கை கூத்துகளுள் ஒன்று; a kind of dance.

நோக்கத்தொதுங்கு (பழ.);.

நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன் (பழ.);.

   9. நோக்கம்; objective, goal.

ஆய்வின் நோக்கைப் பொறுத்தே அதன் போக்கும் அமையும்

   ம. நோக்கு;இ. தேக்.

     [நுல் (=கூர்மை,நுண்மை, இளமை); → நுள் → நொள் → நோள் → நோட்கு → நோக்கு. ஒ.நோ. கொள் → கொள்கு → கொட்கு → கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை (வே.க.);]

     [முள் → மொள் → நொள் → (நொழு);(நொழுகு); → நோக்கு = நுழைந்துபார்த்தல், நுட்பமாய்ப்பார்த்தல், அகக்கண்ணால் பார்த்தல் (க.வி.45);]

 நோக்கு4 nōkku, பெ. (n.)

   ஒசை முதலியவற்றால் கேட்பாரை மீட்டுத் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (தொல்.பொருள்.செய்.103);; attractive grace, an element of poetic art.

     [நோக்கு3 → நோக்கு4 = கூர்ந்து நோக்கிச் சிறப்புப் பொருள் காணுமாறு

அமைக்கும் எழுத்துஞ்சொல்லுமான செய்யுளுறுப்பு.

     “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே” (தொல்,பொருள். செய்.103);.]

நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக்கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல்.

யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிதுநோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை… ஒரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. இஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஒடுதலும் இடையிட்டு நோக்குதலும் கொள்க. (தொல்.செய்.100 இளம்);. மாத்திரை முதலிய உறுப்புக்களைக் கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல் (தொல்,பொருள்.313 பேரா.);. மாத்திரை முதலிய உறுப்புகளை யுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல் (தொல்,பொருள். செய்.1.நச்);. மாத்திரை முதலாக நிரம்பும் அடிகளாலாய தொடையுடையவாஞ் செய்யுள் நடந்த அடி எத்துணையவாயினும் அவை முடி யுங்காறும் வெள்ளைமையும் பிள்ளை மையுமின்றி வந்த சொற்றொடர் கேட்டோர் மறித்து நோக்கிப் பயன் கொள்வதோர் கருவியாகிய யாப்புக்கூறு (மாறனலங்காரம்);.

 நோக்கு5 nōkku, இடை. (part.)

   ஓர்உவமவுருபு (தொல்.பொருள்.287);; a particle of comparison.