நொண்டி1 noṇṭi, பெ. (n.)
1. முடமான ஆள் அல்லது விலங்கு; lame person or creature.
அவனும் நொண்டி, அவன் குதிரையும் நொண்டி. நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் பறப்பானேன். (பழ.); நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு (பழ.);.
2. முடம்; crippled condition, as of the leg or arm.
நொண்டிக்கை.
3. பொய்க்காலால் நடிப்போன் (யாழ்ப்.);; person who dances on stilts.
4 நொண்டி நாடகம் பார்க்க;see momilnāgagam.
[நொண்டு. → நொண்டி. கால் அல்லது கை செயற்படாத குறை ஊனம்;முடம்.]
[P]
நொண்டி2 noṇṭi, பெ. (n.)
நொண்டியடித்துக் கொண்டு சென்று எதிர் அணியினரைத் தொடும் விளையாட்டு; the game of hopping with folded leg.
[நொண்டு → நொண்டி]
இது பகல், இரவு இரண்டு பொழுதுகளிலும் விளையாடும் விளையாட்டு.
ஆடிடமும், பொழுதும், ஆடுவாரும் நொண்டி என்பது, பொட்டலிலும் திறந்த வெளி நிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு.
ஆடு கருவி : ஆடுவார் தொகைக் கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒருபெருவட்டமே இவ்வாட்டத்தின் கருவியாம்.
ஆடுமுறை : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத் தொகையவான இரு கட்சிகளாய்ப் பிரித்துக் கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர்.
மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்து கொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற் குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்று கொண்டு, ஒவ்வொரு வராய் ஒவ்வொருமுறை வட்டத்திற்குள் நொண்டி அடித்துச் சென்று, உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொடமுயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப் பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்கு மிங்கும் ஒடித்திரிவர். அங்ங்னம் ஒடும் போது கோட்டை மிதிப்பினும், கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப் போயின் கோட்டிற்கு
வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலுன்றாக்காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் கோட்டின் மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்); அவருக்கு முந்தினவராலும் தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப் பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்த பின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளி நிற்கும் கட்சியாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டு விடுவதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரைத் தொடுவதுமுண்டு இடையிட்டு ஒரோவொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு;ஒருவரும் ஒருவரையும் தொடாதிருப்பது முண்டு. இங்ங்ணம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத்தலும், சிலரோ பலரோ வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறா திருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும்.
வெளி நிற்கும் கட்சியாரும் அனை வரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஒர் ஆட்டம் முடியும்.
ஆட்ட வெற்றி : உள்நிற்பார் அனை வரும் தொடப்பட்டு விடின் வெளிநிற்பார்க்கும், அங்ங்ணமி ன்றி ஒருவர் எஞ்சியிருப்பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம்.
ஆட்டத் தொடர்ச்சி : ஒருமுறையாடிய பின், மீண்டும் ஒருமுறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ங்னஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள் நிற்பதே இனியதாகக் கருதப்படும்.
ஆட்டத் தோற்றம் : இவ் விளையாட்டுப் போர்வினையினின்று தோன்றியதாகும். போர்க் களத்தில் ஒரு கால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான் பட்டு விழுந்துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம் மற வினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ் விளையாட்டுத் தோன்றிற்று.
குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும் போது, ஒரு காற் குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று.
கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நொண்டி நாடகம் என்னும் நாடக நூல்வகையும் உளது. சீதக்காதி நொண்டி நாடகம்’ இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர் வினைச் செய்தியின் வேறாம்.
ஆட்டத்தின் பயன் : ஒரு கால் நோய்ப் பட்டும் வெட்டுண்டும் நடக்கவி யலாதபோது மறு காலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.
[P]