நொண்டிநாடகம்

நொண்டிநாடகம் noṇṭināṭagam, பெ. (n.)

   கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றைத் திருட முயன்ற போது கால்தறியுண்டு பின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நாடக நூல்; a comic poem in Šindu verse in which a thief is represented as having lost his leg in the act of stealing a horse from amidst an army and reforming himself after wards.

ம. நொண்டி நாடகம்

     [நொண்டி + நாடகம்]

கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்கள் ஆட்சி தென்னாட்டில் நடைபெற்றபோது அவர்களை அண்டிப் பிழைக்க வந்த புலவர்களாலே பாடப்பட்டு வந்த ஒருவகை நாடக இலக்கியம் நொண்டி நாடகம். பண்டைத் தமி ழ் இலக்கியத்தில் இது தோன்றியிராமற் போனாலும், நாடக மேடையில், ஒருவனே நடிகனாகவும், பாடகனாகவும் இருந்து நடித்து வந்த வரிக்கூத்து என்பது இதன் மூலமாக இருக்கலாம். வரிக்கூத்துக்கள் தொண்ணுற்று மூன்றனுள் ஒன்றாகச் சிந்து என்ற பாவினத்தில் இது வளர்ந்திருக்கலாம். இது நாடோடிப் பாடலைப் போலப் பாடப்பட்டு தாழ்ந்த மக்களும் எளிதில் சுவைக்குந் தன்மையுடையதாகப் பாடப்பட்டு இடையிடையே இதற்கு உதவி புரிந்த பாளையக்காரர்களின் புகழுரைகளைக் கொண்டதாக இயற்றப்பட்டது.

நொண்டி நாடகத்தின் கதைத் தலைவன் கூத்தின் மேடையில் தோன்றி அவனுடைய வரலாற்றை அவனே கூறிப் பாடி நடித்துக் காட்சி தருவான். நொண்டி நாடகங்கள் தமிழ் நாட்டில் பல தோன்றியிருக்கின்றன. எல்லாவற்றிலும் அடிப்படையான கதை ஒன்றே தான். திருட்டுத் தொழிலில் பழகின ஒருவன் தன் தொழிலுக்காகப் பல ஊர்களுக்குச் செல் கின்றான். ஒரூரில் விலைமகள் மீது ஆசை கொண்டு அவளுடைய காமவலையிற் சிக்கிப் பொருள் முழுவதும் தந்து விடுகிறான். அவளுடைய தூண்டுதலின் பேரில்

பொருளீட்ட மீண்டும் செல்கின்றான். பலமுறை திருடிப் பொருள் தந்தும் காமவலையிலிருந்து அவன் மீள முடியவில்லை. அப்போது பாளையம் இறங்கியிருந்த ஒரு படைத் தலைவனுடைய குதிரைச்சாலையிற் புகுந்து மாறுவேடத்தில் ஒரு குதிரையைத் திருடுகிறான். காவலர்கள் அவனைப்பிடித்துக் கொள்கிறார்கள். தப்பிப்போக முயன்ற போது பட்ட இடர்களுக்கு அளவே இல்லை. படைத்தலைவனிடம் கொண்டுப் போகப்பட்ட போது அவன் கேட்ட வசவுகளுக்கு அளவில்லை. தலைவன் முற்றும் ஆய்ந்து மாறுகை, மாறுகால் வாங்கி விடும்படி தண்டிக்கிறான். கொல்லனால் கை கால் வாங்கப்படுகையில் அளவற்ற துன்பம் அடைகிறான். இரக்கம் காட்டுவாரின்றி அரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அருளாளர் ஒருவர் வந்து மருந்து தருகின்றார். அவர் கூறிய நன்மொழிகளால் நற்குணத்தனாகி, அவர் காட்டிய ஒரு தலத்திற்குச் சென்று கடவுளை நெஞ்சுருகப் பாடி வழிபாடு செய்கிறான். பிழையைப் பொறுத்து நல்வழி காட்ட வேண்டுகிறான். வியப்புறும் வகையில் காலும் கையும் வளர்கின்றன. சான்றோன் ஆகின்றான். இறைவழிபாட்டில் நின்று அன்பன் ஆகின்றான்.

இதுதான் நொண்டி நாடகத்தின் அடிப்படை வரலாறு. இந்நாடகம் பெரும்பாலும் நொண்டிச் சிந்து என்ற பாவினத்தின் இடையிடையே வெண்பா, விருத்தம் முதலிய செய்யுட்களைக் கொண்டதாக இயற்றப்படும். இது நாட்டு மக்கள் கேட்கையில் நெஞ்சு உருகும் வகையில் வழக்குச் சொற்கள், நாட்டுப் பழக்க வழக்க செய்திகள் சேர்க்கப்பட்டு இயற்றப்படுவது. மேடையில் ஆடுகிறவன் காலைக் கட்டிக் கொண்டு நொண்டி நொண்டி ஆடுவதால் இதனை

     “ஒற்றைக்கால் நாடகம்’ என்றும் கூறுவார்கள்.

சிறந்த நொண்டி நாடகங்கள் : இராமப் பையன் நொண்டி நாடகம் திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், சாத்துர் நொண்டி நாடகம், குளத்தூர் ஐயன் நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், பழநி நொண்டி நாடகம், திருக்கச்சூர் நொண்டி நாடகம், போன்றன.