நொண்டிச்சிந்து noṇṭiccindu, பெ. (n.)
நொண்டி நாடகம் பார்க்க;see nonaināgagam.
[நொண்டி + சிந்து. சிந்து = ஒருவகை யாப்பு ஒலி.]
நொண்டிச்சிந்து: சந்தப்பாடல்களின் (கவியின்); வகைகளில் இதுவும் ஒன்று. இதன் முதலடியில் இரண்டு அல்லது மூன்று சீர்களும் ஒரு தனிச் சீரும் இரண்டாவது அடியில் நான்கு சீர்களுமாக மாறி மாறி வரும். நொண்டி நாடகம் பெரும்பாலும் இந்தச் சிந்து யாப்பு வகையில் இயற்றப் படுவதால் இதற்கு நொண்டிச் சிந்து என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
திருமலை நாயக்கர் மன்னனின் அவைக்களப்புலவராக வாழ்ந்த இராமப்பையன் என்பவரால் முதன்முதலில் நொண்டிச்சிந்து எனும் சந்தப்பாடல்(க்கவி); வகையை நொண்டியை கதை மாந்தராகக் கொண்டு படைத்தமையால் இப்பெயர் பெற்றது என்பது ஒரு சாரார் கருத்து.
‘சிந்து என்னும் யாப்பு வகைக்கு இன்னது தான் இலக்கணம் என்று தொல்காப்பியம், நன்னூல், காளிகை போன்றவற்றில் காணப் படவில்லை. சிந்தடி
என்பது மூன்றடி என்று மட்டும் காணப்படுகிறது. சிந்தியல் வெண்பா மூன்றடியாய் வரும். சிந்து என்னும் யாப்பு வகைக்குப் புலவர் திரு. த.ச. தமி ழனார் அவர்கள் தம்முடைய யாப்பு நூலில் (பக். 108, 109); இலக்கணம் கூறுகின்றார்.
“முதலடிச் சீர்களும் தனிச்சொல் அன்றி மறியடிச் சீர்களும் எண்னொத் திருப்பின் சமனிலைச் சிந்தாம்;
ஒன்றின்மற் ஹான்றுள் மிகுநிலை யாயின் வியனிலைச் சிந்தாம்”
முதலடியில் உள்ள சீர்களும், தனிச்சொல் பெற்று மடங்கி வரும் மற்றைய அடிச்சீர்களும் ஒத்த எண்ணிக்கை உடையதாயின் சமனிலைச் சிந்து எனவும், ஒரடியை விட மற்றோர் அடியின் சீர் மிகுந்து இருந்தால் வியனிலைச் சிந்து எனவும் அமையும்.
சமனிலைச்சிந்து
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே”.
“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி – யென மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”.
வியனிலைச் சிந்து
“தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான். என்னப்பன் என்னையன் என்றால் -அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்”.
நொண்டிச்சிந்து போலவே கும்மிச் சிந்து, காவடிச்சிந்து, வண்டிக்காரன் சிந்து எனப்பலவும் உண்டு.