நொடி1 noḍittal, 4 செ.கு.வி. (v.i.)
1. நொடிசொல்(லு);-தல் பார்க்க;see nodi-50.
‘பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு” (கலித். 89);.
2. உறுப்பை ஆட்டுதல், சைகைக் காட்டுதல்; to gesticulate, use action, in speaking.
இறால் நொடிக்கிறது போல நொடிக்கிறான் (வின்.);.
3. பால் முதலியன சுரத்தல்; to collect, as milk in the udder of a cow.
பால் இன்னும் நொடிக்க வில்லை (யாழ்ப்.);.
4. வணிகத்தில் இழிப்படைதல் (நட்டமடைதல்);; to break down completely, as a concern.
வணிகம் நொடித்துப் போயிற்று.
5. சக்கரம் முதலியன கட்டுக் குலைதல்; to break, snap, as a wheel.
விழிப்பாயிரு! சக்கரம் நொடிக்கும் (வின்.);.
6. நடக்கும் போது கால்சிறிது வளைதல்; to bend slightly, as the legs in walking.
கால் நொடித்துக் கொண்டது.
7. ஒடித்தல்; to break.
குச்சியை நொடிக்கிற மாதிரி விரலை நொடித்துவிடுவேன்.
8. சாய்த்தல்; to tilt.
வலக்கைப்பக்கம் கொஞ்சம் நொடி.
9. ஒப்புதல் இல்லை என்பதைத் தெரிவிக்க தலையை ஒரு பக்கமாகத்
திருப்பித் தோள்பட்டையில் இடித்தல்; to turn one’s head and hit the chin on the shoulder as a gesture of disapproval.
கேட்டதற்குப்பதில் சொல்லாமல் கழுத்தை நொடித்து விட்டுப் போய்விட்டான்.
10. செல்வ நிலை தாழ்ந்து வறுமையடைதல்; to impoverish.
11. பொடியாகுதல்; to broken to pieces.
12. நிலை கெடுதல்; to destroy, to ravish.
ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி.
[நுள் (வளைவு); → (நொள்); → நொடி → நொடி-த்தல் (மு.தா.);]
நொடி2 noḍittal, 4 செ.குன்றாவி. (v.t.)
1. சொல்லுதல் (திவா.);; to say, tell, speak, declare.
சும்மா நொடிக்காதே! கொஞ்சம் வாயை மூடு. [க. நுடி;தெ. நொடுகு ].
2. சைகையால் அழைத்தல்; to call by signs.
“நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக் கொண்டு” (ஈடு, 5.3:7);.
3. மனத்தாங்கல் உண்டாம்படிக் கோள் சொல்லுதல் (வின்.);; to insinuate so as to stir up ill-will.
[தெ. நொடுச்சு].
4. பழித்தல்; to make unfavorable allusions: to use Sarcasm.
“தாயுந்தமரு நொடிக்கின்றார்” (அருட்பா, 3, ஆற்றாக்காத.11);.
5. கட்டை விரலையும் நடு விரலையும் சேர்த்துச் சொடக்குதல்; to snap, as with the thumb and the middle finger,
“நொடிப்பதோ ரளவில்” (திவ். திருமாலை, 43);.
6, அழித்தல் (பிங்.);; to destroy, annihilate, reduce to primitive elements or atoms.
“நோக்காது நோக்கி நொடித்தன்றே” (சி. போ. 1:4);
ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி.
[நொடி1 → நொடி-, → நொடி2-த்தல். இது பிறவினை.]
நொடி3 noḍidal, 2 செ.குன்றாவி. (v.t.)
சொல்லுதல்; to say, tell, speak, declare.
“சென்றது நொடியவும் விடாஅன்” (மலைபடு. 545);.
ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி.
[நொடி1 → நொடி3 → நொடி-தல் இது தன்வினை.]
நொடி4 noḍidal, 2 செ.கு.வி. (v.i.)
1. ஒடிதல் (நெல்லை);; to break.
பந்தல் கால் நொடிந்து கீழே விழுந்து விட்டது.
2. மனம்தளர்தல்; to be broken.
அப்பாவை இழந்தபின் அவன் மிகவும் நொடிந்துவிட்டான்.
3. பொடியாகுதல்; to broken to pieces.
[நொடி1 → நொடி4 -தல்.]
நொடி5 noḍi, பெ. (n.)
1. நோய் என்பதோடு இணைந்துவரும் சொல்; word, phrase, language, speech.
“புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்” (பெருங். உஞ்சைக். 33:72);.
2. முதுமொழி; wise saying.
“பிசியு நொடியும்” (பெருங். உஞ்சைக். 33:175);.
3. புதிர் (சூடா.);; riddle, enigma.
4. கதை; story.
5. செய்யுள்; stanza.
“சடகோப னொடியாயிரத் திப்பத்தும்” (திவ். திருவாய். 10. 5:11);
ம., தெ. நொடி.
[நொடி1 → நொடி5]
நொடி6 noḍi, பெ. (n.)
1. ஓசை; noise.
“அமைக்கண் விடுநொடி” (அகநா. 47);.
2. கையின் கட்டை விரலையும் நடுவிரலையும் தெறித்து உண்டாகும் ஒலி; crack or snap, as of the thumb and the middle finger.
3. கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலை நொடிப்பதற்கு ஆகும் நேரம் போன்ற மிகக் குறைவான நேரம்; instant, as the time-measure of the snap of the finger.
“கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை”(தொல். எழுத்து. 7);.
நொடிப் பொழுதில் வந்துவிடு. “நொடிப்போதும் விணிடேல்” (பழ);.
4. நோய்த் துன்பம்; ailment.
நோய் நொடியின்றி வாழ வேண்டும்.
5. வினாடி; Second.
அறுபது நொடி ஒரு நிமயம் (நிமிடம்);.
ம., தெ. நொடி.
[நுள் → (நொள்); → நொடி. (மு.தா.);]
நொடி7 noḍi, பெ. (n.)
வண்டிப் பாதையிலேற்பட்ட குழிப்பள்ளம்; ruggedness, of road, rut.
பாதை நொடியாயிருக்கிறது. (உ.வ.);
[நுல் (துளை); → நுள் → நொள் → நொடு → நொடி. (வே.க.);]
நொடி8 noḍi, பெ. (n.)
1. பொடி; powder.
2. புழுதி; dust.
[நுள் → நொள் → நொடி. (சு.வி.);]