நொச்சிநியமங்கிழார் nocciniyamaṅgiḻār, பெ. (n.)
கழகக்காலத் தமிழ்ப்புலவர்; Sahgam poet.
மறுவ. நொச்சி நீயக்கிழார்.
[நொச்சிநியமம் + கிழார்]
நொச்சிநியமம் ஊர்ப்பெயர். இன்று நொச்சியம் என்று வழங்குகிறது. வேளாண் மரபிரனர் வாழும் ஊர். புறநானூறு (293);, அகநானூறு (52);, நற்றிணை (17, 208, 209); ஆகியவற்றில் இவரது பாடல்கள் காணப்படுகின்றது.
நகர்ப்புறத்தே போர் நிகழும் காலத்தே அரண் சூழ்ந்த நகரிலிருந்த நெடுமனை யொன்றிற்கு இவர் சென்று அங்கே இருந்து மறக்குடி மகளிரின் செயல் நலங்களைக் காணும் பேறு பெற்றார். தானை விரும் தானைத் தலைவரும் வாழும் வழியே வருகையில் பூ விற்கும் மகளிர் அத்தெருவில் வராது வேறு தெருக்களை நோக்கிச் செல்வது கண்டார். ஒரு வீரனது மனைக்குச் சென்று அவன்மனையாளைக் கண்டு சொல்லாடுங்கால் தாம் கண்ட இக்காட்சியைத் தெரிவித் தார். மறக்குடிமகளாகிய அவள், சான்றோரே! வள்ளுவன் யானை மேலிருந்து தனது தண்ணுமையை ஒலித்து, அரணுக்குப் புறத்தே முற்றி நிற்கும் பகைவரை யெறிதற்குச் செல்லும் வீரர்க்குக் காஞ்சிப்பூ உரியதாதலால், அதனைச் சென்று பெறுமாறு பணிப்பன். அவ்வொலி ஈண்டு மனையிடத்துள்ளார் செவியிற் கேட்குமாறு ஒலிக்கின்றது. போர்ப்பறை கேட்ட அளவிலே புறப்பட்டுச் செல்லற் பாலராகிய வீரருள் நாணமி ல்லாதார் சிலர் இப்பூக்கோள் குறித்த தண்ணுமையொலி கேட்கு மளவும் மனையில் இருப்பர். அவரை விரைய வருமாறு அழைப்பதும் அதன் கருத்தாகும். இத் தண்ணுமை யொலி கேட்டபின் பூவிலைப் பெண்டு, போர்தொடங்கி விட்டது. இனி ஆடவர் மனைக்கண் இரார் அதனால் இம்மகளிர் நம்பால் பூக்கள் வாங்க மாட்டார் என்று
கருதி பிறர் மனைக்கண் செல்கின்றனர் அளியள் என்று பூவிலைப் பெண்டின் பொருட்டு இரங்குவான்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட நொச்சி நியமங்கிழார் வியப்புமிகக் கொண்டு அவள் கூற்றுப் பொருளாகப் பாடிய பாட்டு:
“நிறப்படைக் கொல்கா யானை மேலோன்
குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை
நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்
எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ
அளிய டானே பூவிலைப் பெண்டே” (புறநா.293.);
அகநானூற்றில் இவர் பாடிய பாடல் சிறப்புடையது. காட்டில் குறமகளிர் வேங்கைப் பூவைப் பறிக்கமுடியாமல் புலிபுலியென இரைச்சலிடுவதும், அதைக் கேட்ட குறவர் வில்லேந்தி ஓடிவருவதும், அவர்களைக் கொண்டு இம் மகளிர் தாம் வேண்டும் பூவைப் பெறுவதும் இவர்பாட்டில் அழகுறக்குறிக்கப் படுகின்றன. அப்பாடல்:
“வலந்த வள்ளி மானோங்கு சாரற்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா விசைய பூசல் பயிற்றலின்
ஏகல் அடுக்கத் திருளளைச் சிலம்பின்
ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம்
மலைகெழு சீறுர் புலம்பக் கல்லெனச்
சிலையுடை யிடத்தர் போதரு நாடன்
நெஞ்சமர் வியன்மார் புடைத்தென அன்னைக்கு
அறிவிப் பேங்கொல் அறிவியேங் கொல்லென
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோயெனச் செப்பா தீமே” (அகநா. 52.);
மனை வாழ்வில் தலைவன் பிரிந்த விடத்து வேறு பட்டாற்றாத தலைமகட்குத் தோழி, தலைவன் அன்புநிலையை எடுத்தோதி ஆற்றுவிக்கும் திறம் இவரால் மிக்க நயமுறப் பாடப் பெறுகின்றது. களவின்கண் தலைவி அறத்தொடு நிற்கும் விரகும், வேண்டு மிடத்து வழங்கும் முன்னிலைப் புறமொழியும் இலக்கிய இன்ப ஊற்றாக உள்ளன.
“விறல் சாய் விளங்கிழை நெகிழ விம்மி
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப
விளிவிலா கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து
எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள்
செல்வர் அல்லர்நங் காதலர் செலினும்
நோன்மார் அல்லர் நோயே மற்றவர்
கொன்னு நம்பும் குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள்
முடியா தாயினும் வருவர் அதன்றலை
இன்றுனைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலுமிப் பெருமழைக் குரலே” (நற். 208);