நேர்

நேர்1 nērtal,    2.செ. கு. வி. (v.i.)

   1. பொருந்துதல்; to be fit or appropriate.

     “நேரத் தோன்று மெழுத்தின் சாரியை” (தொல். எழுத்து. 134);.

   2. நிரம்புதல்; to be complete.

     “நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (தொல். சொல். 7);.

   3. இவ்வாறு செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் நிகழ்தல்; to happen, occur, transpire.

இது காலத்தால் நேர்ந்தது. கோவில் திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் இருக்க வலுத்தகாவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அச்சிடுவதில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது.

   4. எதிர்ப்படுதல்; to appear, come to view.

     “பொழிலோவொன்று நேர்ந்ததுவே” (வெங்கைக்கோ. 321);.

   5. இளைத்துப்போதல்; to grow thin, lean, to be emaciated.

உடம்பு நேர்ந்துபோய் விட்டது.

   6. மென்மையாதல்; to be soft;

 to yield to the touch.

     “ஐந்து நேர்ந்தே” (காசிக. சிவ. அக். 18);.

குட. நேர் (to come to view.);.

     [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]

 நேர்2 nērtal,    2.செ. குன்றாவி, (v.t.)

   1. எதிர்தல்; to meet.

     “வேந்தன்றனை நேர்ந்து காண்பானா’ (இரகு. தசரதன். 21);.

   2. நெருங்குதல்; to approach, come near to.

     “வெங்கரி…. வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும்” (கந்தபு. தருமகோப. 71);.

   3. தீண்டுதல்; to seize, take hold of.

     “குழலித்திங்கட் கோணேர்ந்தாங்கு” (பெரும்பாண். 384);.

   4. பெறுதல்; to obtain.

     “நிலையிலா நீர்மை யாக்க நேர்ந்துழி” (சேதுபு.திருநாட்.21);.

   5. கொடுத்தல்; to grant, bestow.

     “கரவாளை நேர்ந்தானிடம் போலும்” (தேவா. 111, 8);.

   6. உடன்படுதல்; to agree, consent.

     “அழும்பில் வேளுரைப்ப நிறையருந்தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 25:178);.

     “நெருப்பிலா விடத்துப்புகையிலை யெனனேர” (மணிமே29:102);

     “மகிழ்வுனாங்கவை நேரா” (கூர்ம.அரியய.8);

   7. ஒத்தல்; to resemble, equal.

     “கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப் 48:8);.

     “நெல்லினேரே வெண்கலுப்பென” (அகநா 140:7);.

     “கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு” (திருவாச. 5: 27);.

   8. உறுதிசெய்தல்; to resolve, vow, take vow.

     “நற்றார்கலவே மென நேர்ந்தும்” (பு. வெ. 12. பெண்பாற். 7);.

   9. அமர்த்துதல் (நியமித்தல்); (வின்);; to appoint, designate, appropriate, assign.

   10. தண்டனைக்குட்படுத்துதல் (வின்.);; to consign, doom.

   11. வேண்டுதல் (அக.நி.);; to entreat, pray.

   12. சொல்லுதல்; to say, to speak.

     “சீர்ச்சடகோபன் நேர்தலாயிரத்து” (திவ். திருவாய். 1.8:11);.

   13. கடவுளிடம் வேண்டுதலுக்காக (பிரார்த்தனைக்காக); வைத்தல்;   பொருத்தனை பண்ணுதல்; to appropriate, as an offering to God;

 to consecrate, dedicate.

     “தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” (திவ். நாய்ச். 9:6);.

     “செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளை” (கலித்.101:27);. பழனிக்குத் காவடி எடுக்க நேர்ந்து கொண்டான் (உ. வ.);.

   14. எதிர்த்தல்; to oppose, resist, encounter, attack.

     “அமர்கோள் நேரிகந்து ஆர்எயில் கடக்கும் பெரும்பல் யானைக்குட்டுவன்” (பதிற்றுப். 29:13, 14);.

     “தானையை நேர்ந்து கொன்று’ (கம்பரா. மூலபல. 57);.

   15. அறுத்தல்; to cut off. sever.

     “ஓராதான் பொன்முடி யொன்பதோ டொன்றையும் நேரா” (திவ். பெரியாழ். 3.9:10);.

   க. நேர்;   ம. நேருக;   கோத. நெர் (opposite);. நேர் (to come to view);;   து. நெரியுநி, நெரெவுநி (to assemble);;தெ. நேர்சு (to learn);.

     [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]

 நேர்3 nērttal,    4.செ. குன்றாவி. (v.t.)

   1. ஒத்தல்; to resemble, equal.

     “திண்ணறி வாளரை நேர்ப்பார் யார்” (நாலடி, 27);.

     “கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப். 48.8);.

     “நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த” (சிலப். 7:8);.

     “பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய்” (மணிமே. 2:16);

   2. எதிர்த்தல்; to oppose, attack.

     “நேர்த் தின்னா மற்றவர் செய்தக்கால்” (நாலடி. 67);.

     [நேர்2 → நேர்3-. இது பிறவினை வடிவம்.]

 நேர்4 nēr, பெ. (n.)

   செய்ய, செய்யும்படி ஆகிய வடிவங்களின்பின் ஒருசெயல் நிகழ்ந்தது தற்செயலாக அல்லது சூழ்நிலையின் கரணியமாக என்பதை உணர்த்தும் துணை வினை; after the infinitive or future relative participle (padi); used to express the sense of ‘happen to’ ‘be forced to’.

அஞ்சல் வந்ததால் உடனே புறப்பட்டு வரநேர்ந்தது. வழியில் அவரைப் பார்க்கும்படி நேர்ந்தது.

     [நேர்1 → நேர்4]

 நேர்5 nēr, பெ. (n.)

   1. வளைவு அல்லது விலகல் எதுவும் இல்லாதது, செவ்வை; straightness, directness.

   நேர்வகிடு;நேராக நில். நேரா நோன்பு சீர் ஆகாது (பழ.);.

     “முழங்குகட றந்த விளங்குகதிர் முத்தம் அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை” (மதுரைக். 315,316);.

     “நேர்சீர் சுருக்கிக்காய கலப்பையிர்” (மலைபடு. 13);.

     “ஒண்ணுதல் மகளிர் ஒங்கு கழிக்குற்ற கண்நேர் ஒப்பின்

கமழ்நறு நெய்தல்” (நற். 283);.

   2. அறம் (நீதி);:

 rightness, justness, impartiality.

அவன் நேர்பட நடவாதவன். நேர்படஒழுகு (பழ.);.

     “புரையில் நுண்னேர் எல்வளை நெகிழ்த் தோன்குன்றத்து” (நற்.236);.

   3. நல்லொழுக்கம்; morality, virtue, honesty.

   4. திருந்திய தன்மை; refinement, nicety.

     “நேரிழையாய்” (திருவாச. 7:2);.

   5. மாறுபாடு (யாப். வி. 57:222);

 opposition.

   6. உடன்பாடு (திவா.);; agreement, consent, settlement.

   7. நேர்விடை பார்க்க;see nér-vigal.

     “சுட்டு மறைநேர்” (நன். 386);.

   8. நிலைப்பாடு (யாப். வி. 58, உரை);; firmness,

   9. முன்; front

   10. உயிர் அல்லது உயிர் மெய் தனித்த நேரசை (தொல். பொருள். 315);; a metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant.

     “குறிலே நெடிலே குறிவினை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசின் பெயரே” (தொல். பொருள். செய், 3);.

     “குறிலே நெடிலே குறவினை குறிலினையேனைக் குறினெடிலே நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரை யென்றறிவே” (யா. கா. 5);

   ம. நேர்;   க. நேர்;   குட. நேரீ (truth fact);;து. நேரே.

     [நேர்1 → நேர்6]

 நேர்6 nēr, பெ. (n.)

   1. நீளம்(சூடா.);; length, extension.

   2. பொருந்திய வரிசை (வின்.);; row series, regularity.

   3. பாதி (திவா.);; half, moiety.

   4. நுண்மை; minuteness, smallness, fineness, slenderness,

     “துடிகொ ணேரிடையாள்” (திருவாச. 29:5);.

   5. செலவு (கதி); (வின்);; tendency, course, direction.

   6. ஊர்த்துவநிலை; verticality.

     “நேரவிரும் புண்டரர்க் கருள்வான்’ (அஷ்டப்.

திருவேங்கடத்தந், 6).

   7. தனிமை (திவா.);; solitariness, solitude.

   8. நிகர்; equal.

பாவேந்தர் தமிழை உயிருக்கு நேர் என்று கூறினார்.

     “நெல்லி னேரே வெண்கலுப்பென” (அகநா. 140:7);.

     ”நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி” (நாலடி, 72.);

     “கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” (குறள், 550);.

   9. நேரடி; direct.

இஃது என் நேர் விருப்பம்.

   ம, க. நேர்;   தெ. நேரு;து. நேரெ.

     [நேர்1 → நேர்6]

 நேர்7 nēr, பெ. (n.)

   1. கொடை (சூடா.);; gift.

   2. மிகுதி (திவா.);; excess, excessiveness.

   3. வலிமை; strength.

     “நேர் மரப்பலகையும்” (சீவக. 2218);.

   4. உவமை; comparison, similarity.

     “தன்னே ரில்லோன்” (திருவாச. 3:30);.

     “தன்னேரில்லாத சிவன்றனை” (சிவரகநந்திகேசுரநமனுக்கு.14);.

   5. மென்மை; soft.

     “பிணங்கு நேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே” (சிலப். 7:13);.

     “நேரிமலர் நிறைகனை உறையுஞ்” (அகநா. 198:16);.

     [நேர்1 → நேர்2]

 நேர்6 nēr, பெ. (n.)

   திருச்சுற்று; manner.

     “இந்நேரிலே தந்தம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ” (திவ். பெரியாழ். 2.2.3 வியா. பக். 253);

     [நேர்1 → நேர்6]