நேரிசை வெண்பா nērisaiveṇpā, பெ. (n.)
செய்யுளின் இரண்டாமடி யிற்றில் தனிச்சொற் பெற்றுவரும் வெண்பா வகை; a kind of venba having a detached foot at the end of the second line.
[நேரிசை + வெண்பா.]
இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற தனிச்சொல்லால் அடி நிரம்பிச், செப்பலோசை வழுவாது முதலிரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பமாய் வரினும், நான்கடியும் ஒரு விகற்பமாய் வரினும் இருகுறள் நேரிசை வெண்பா அல்லது நேரிசை வெண்பா எனப்படும்.
எ-டு:
“தடமண்டு தாமரையின் றாதா டலவன்
இடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினா னூர்” (யா.கா.24 மேற்கோள்);
இது இரண்டு குறள் வெண்பாவாய், நடுவுமுதற் றொடைக்கேற்ற தனிச்சொல்லான் அடிநிரம்பிச் செப்பலோசை வழுவாது இரண்டு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா.
“அரிய வரைகிண்டு காட்டுவார் யாரே
பெரிய வரைவயிரங் கொண்டு-தெரியிற்
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
பெரிய வரைவயிரங் கொண்டு”
இது இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச்சொல்லான் அடிநிரம்பிச், செப்பலோசை வழுவாது ஒருவிகற்பத்தான் வந்த நேரிசைவெண்பா.
முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப் படாத மாழைகளை (உலோகங்களை); ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவினிறுதிக்கண் ஒன்றும் இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள அவை ஆசிடை நேரிசை வெண்பா வெனப்படும்.
“தாமரையின் றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து
தாமரையின் நாற்றமே தானாறுந்-தாமரைபோற்
கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியென்
கண்ணார்வஞ் செய்யுங் கருத்து” (யா.கா.24.மேற்);
இது முதற் குறட்பாவின் இறுதிக் கண் ஈரசையான், ஆசிட்டு இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.
“கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற காலம்” (நாலடி,அறிவு.10);.
இது முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒரசையான் ஆசிட்டு இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.
“ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை யடக்குப-மூத்தொறுஉந்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்
போத்தறார் புல்லறிவி னார்” (நாலடி, கயமை1);.
இது முதற்குறட்பாவின் இறுதிக்கண் ஒரசையான் ஆசிட்டு ஒருவிகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.
“வஞ்சியே னென்றவன்ற னுருரைத்தான் யானுமவன் வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன் வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ (யா.கா.24 மேற்.);
இது முதற்குறட்பாவின் இறுதிக் கண் ஈரசையான் ஆசிட்டு ஒருவிற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.
நேரிசைவெண்பாவிற்கு மேலும் சில எடுத்துக் காட்டுகள்:
“பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்-திறனிலர் என்(று);
என்னப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்” (ஆச்சார37);
“நாணாக்கால் பெண்மை நலனழியும் முன்னின்று
காணாக்கால் கைவளையுஞ் சோருமால் – காணேனர்ன் வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டெவ்வந் தீர்வதோர் ஆறு” (முத்தொள்.28);.
“தோற்ற மழிவுமருள் சூர்நோய் வரைப்பிலதா யாற்ற லறிவுண்மை யாய்த்துய்தாய்ப் – போற்று மளவ ருளத்தளவா யான்றவறங் கோடா துளது விடாப் பொருளா கும்.” (சேந். செ.2);
“இறையே தமையா ளடிகளென வெண்ணார் கறையே யொழியார் களிகொன் – மிறையேசெய் தின்ன றருமளறே யெய்துபுபன் னாளுழல்வ ரென்னு மறைபொய் யிலை.” (சேந். செ.4);
“நோக்கி விழிகளிப்ப நுண்செவிகேட் டுக்களிப்ப நாக்கிழமை சொற்று நனிகளிப்ப – நீக்க நினைந்தெனெஞ் சங்களிப்ப நீமஞ்ஞை வந்துட் களிந்தழைதெள் ளின்பக் கடால்” (சேந்.செ.16);
“கண்ணாளர் போற்றுமெண் கண்ணாற்கு மாலுக்கு மண்ணா மலைப்பெயரா ளற்கந்தா – டண்ணார் பெருக்கி யருள்புரிந்த பெய்கழற்சே யிந்நாள் வெருக்கொ ளெனக்குமருள் வீடு.” (சேந்.செ.30);