நேரிசையொத்தாழிசைக்கலிப்பா nērisaiyottāḻisaikkalippā, பெ. (n.)
தரவொன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றுவருங் கலிப்பா; a kind of Kasppä, having one taravu, three tā sišai, one detached foot and Šursdagam.
“தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய் நிரலொன்றி னேரிசை யொத்தாழிசைக்கலி” (யா.கா.38);.
[நேரிசை + ஒத்தாழிசை + கலிப்பா.]
ஒத்தாழிசைக்கலிப்பா மூன்று வகைப்படும். அவையாவன: நேரிசையொத்தாழிசைக்கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா. வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா, நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, தரவு, தாழிசை தனிச்சொல், கரிதகம் என்ற நான்கு உறுப்போடும்;அம்போதாங்கயொத் தாழிசைக் கலிப்பா, தரவு, தாழிசை. அம்போதரங்கம். தனிச்சொல், கரிதகம் என்ற ஐந்து உறுப்போடும்: வண்ணகவொத் தாழிசைக்கலிப்பா தரவு தாழிசை, வண்ணகம் (அராகம்);, அம்போதாங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்போடும் வரும்.
முன் ஒரு தரவு வந்து, அதன் பின்பு மூன்று தாழிசைவந்து, அதன் பின் ஒரு தனிச்சொல் வந்து, அதன்பின் ஆசிரியத்தானாவது, வெண்பாவானாவது ஒரு சுரிதக உறுப்புப் பெற்று வருவது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா. யா.கா.38).
தரவு எனினும், எருத்தம் எனினும் ஒக்கும்: தாழிசை எனினும், இடைநிலைப்பாட்டு எனினும் ஒக்கும்;தனிச்சொல் எனினும், விட்டிசை எனினும், கூன் எனினும், தனிநிலை எனினும் ஒக்கும் சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வாரம் எனினும், வைப்பு எனினும் , போக்கியல் எனினும் ஒக்கும்.
ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவிற்கு எடுத்துக்காட்டு
“வானெடுங்கண் பனிகடர. வண்ணம்வே
ருய்த்திரிந்து
தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூனொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ, இது தரவு.
சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரரோ பெரியவரே,
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே
சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே யென்பவாற்
புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே.
இவை மூன்றுந் தாழிசை, எனவாங்கு.
இது தனிச்சொல்.
அருளெனு மிலராய்ப் பொருள் வயிற் பிரிவோர்பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே”
இது சுரிதகம்.
இது தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்றும் இரண்டிரண்டடியாய்த், தனிச்சொற்பெற்று, மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா.
இதனை மயேச்கரர்.
“தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த்
தனிச்சொற் கிடந்து கரிதகந் தழுவ
வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி” எனவும், காக்கைபாடினியார்
“தரவு தாழிசை தனிச்சொற் கரிதகம் எனுநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி” எனவும் கூறுகின்றார். (யா.கா.38 உரை); எடுத்துக்காட்டு (2);
“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த காகமு முரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய
ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும
காணே மல்லேங் கண்டனங் கடத்திடை
யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய
மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்;பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்
கணையளே;ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;எனவாங்கு,
இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடிஇச் சென்றனள் அறந்தலை பிரியா வாறுமற் றதுவே”(கலித்.9);
இது தரவு பதினோறடியாய் தாழிசை மூன்றும் மூன்றடியாய், தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக்கலிப்பா.
வெள்ளைச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு எடுத்துக்காட்டு.
“முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனே
எத்திசையும் பல்லுயிர்க ளின்புற வினிதிருந்து
பத்துறு திசையனைத்தும் பகைபசி பிணிநீங்க
உத்தமர்க டொழுதேத்த வொளிர்வரைபோற்
செலவினாய்
இது தரவு.
எள்ளனைத்து மிடரின்றி யெழின்மாண்ட பொன்னெயில் உள்ளிருந்த வுன்னையே வுறுதுணையென் றடைந்தோரை வெள்ளில்சேர் வியன்காட்டு ளுறைகென்றல் விழுமிதோ. குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு
கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டு ளுறைகென் றல்பெருமையோ விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரைத்
தடத்தகைய காடுறைக வென்பதுநின் றகுதியோ.
இவை மூன்றுந் தாழிசை,
எனவாங்கு
எனைத் துணையை யாயினு மாகமற் றுன்கட் டினைத்துணையுந் தீயவை யின்மையிற் சேர்தும் வினைத்தொகையை விட்டுக வென்று.”
இது கரிதகம்.
இது தரவு நான்கடியாய், தாழிசை மூன்றும் மும்மூன்றடியாய், தனிச்சொல் பெற்று மூன்றடி வெள்ளைச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. (யா.கா.38 உரை);