நேரடி1 nēraḍi, பெ. (n.)
ஐந்துவகை செய்யுளடிகளில் நாற்சீரால் வருவது; a line of four metrical feet, one of five kinds of adi.
“பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே” (தொல்.1295);.
“நாலொருசிர்அறை தருகாலையளவொடு நேரடி” (யா.கா.12);.
[நேர் + அடி.]
ஐந்துவகை அடிகள்: குறளடி சிந்தடி,நேரடி, நெடிலடி, கழிநெடிலடி.
குறளடி: இரண்டு சீரால் ஆகியது.
எ.டு.
“திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொள் மாலையாய்” (யா.கா.13 மேற்கோள்);
“வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி
நீர்ச்செறுவி னினெய்தல்
பூச்சாம்பும் புலத்தாங்கண்
காய்ச்செந்நெற் கதிரருந்தும்
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழற் றுயில்வதியும்” (பட்டினப். 5-15);
சிந்தடி: மூன்று சீரான் ஆகியது.
எ.டு. இருது வேற்றமை யின்மையாற்
கருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்”
“சோலை யார்ந்த கரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமாயின்
நீல வுண்கண் இவள்வாழுமே”
“கயலெழுதிய விமய நெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந் தண்பொழின் மன்னர்
ஏவல் கேட்பப் பாரர சாண்ட” (சிலப்.17:1);
நேரடி: நேரடி எனினும் அளவடி எனினும் ஒக்கும். நாற்சீரால் அமையும் அடி
எ.டு:
“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் துங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறுந்.18);
“சூரல் பம்பிய சிறுகால் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை யெனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே”(யா.கா.34, மேற்கொள்);
“கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமே லவன்வயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி’
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த வாரமு மகிலும்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவு நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”
“முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதி தென்னி லங்கையில்
அன்னை யிட்டதி அடிவயிற்றிலே யானு மிட்டதீ மூள்க மூள்கவே.”
நெடிலடி: ஐந்து சீரான் அமையும் அடி.
“வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் தாம்பொழுது
காதற்ற ஆசியும் வாராது காணுங் கடைவழிக்கே”
“கடையவ னேனைக் கருணையி னால்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேனெம்பி ரான்என்னைத் தாங்கிக் கொள்ளே” (திருவாச. நீத்தல்.1);
“நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ச ண் மு. க மு. ம் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.” (கந்தரலங்காரம்);
“சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சார்ந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒருதாழ்வு இல்லையே”. (கந்தரலங்காரம்);
“மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வான வர் க் கு மேலான தேவனே மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண்படைத் திலனே அந்த நான்முகனே”.
கழிநெடிலடி: ஐந்துசீரின் மிக்குவருவது.
அறுசீர்:
“தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை
கண்விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ” (கம்பரா.பால.36);
“முத்து வடஞ்சேர் முகிழ்முலை மேல்
முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர்
மணிப்பொற் கபாடம் திறமினோ” (கலிங்,கடை.30);
“கலவிக் களியின் மயக்கத்தாற்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடந் திறமினோ.”
எழுசீர் கழிநெடிலடி:
“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினா லிளைத்தே
விடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்.” (அருட்பா.);
எண்சீர் கழிநெடிலடி:
“கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஒவின தாரகை ஒளிஒளி உயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவநற் செறிகழல் தாளினை காட்டாய்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே”
நேரடி2 nēraḍi, பெ. (n.)
1. மற்றொன்றின் மூலம் அல்லாத பங்கேற்பு, இடையில் எதுவும் குறுக்கிடாத பங்கேற்பு,
direct (without any intervention of or mediation of someone or something.
கலவரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவருக்குத் தண்டனை உண்டு.
2. நேருக்கு நேர்; நேர்முகம்; face to face.
இந்தத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் நேரடிப் போட்டி இருக்கும். கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலைச் சொல்லுங்கள்.
3. கோயில் விழா, விளையாட்டுகள் முதலியவை ஒலிபரப்பாகும் போது அல்லது நடைபெறும் இடத்திலிருந்து உடனடியாக அனுப்பப்படுவது; live broadcasting.
மின் தடைகாரணமாக நேரடி ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
4. போக்குவரத்துப்பற்றிக் கூறும்போது இடையில் நிறுத்தங்கள் இல்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மட்டும் என்று அமைவது; with reference to public transport through.
விழாவுக்கு என்று ஐந்து பேருந்துகள் நேரடிப்போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடிப்போக்குவரத்து உண்டு.
[நேர் → நேரடி]