நெளி

நெளி1 neḷidal,    2செ.கு.வி.(v.i.)

   1. புழு, பாம்பு முதலியவை வளைந்து நகர்தல்; to crawl.

நெளிந்து நெளிந்து பாம்பு சென்றது. கத்திரிக்காயில் புழு நெளிந்தது.

   2. சுருளுதல்; to bend, roll in.

     “நெளிதிரைக் கடலுலகெலாம்” (சீகாளத்.பு. நக்கீ.43);.

அவனுக்கு நெளி மயிர்

   3. குழிதல்; to be hollow.

     “நிலனெளி மருங்கி னிர்நிலை பெருகத் தட்டோர்” (புறநா.18);.

   4. வெட்கத்தால் நேராக நிற்காமல் உடல் வளைதல்; to wriggle, writhe.

     “சேட னெளிதரப் பெயர்வர்” (கந்தபு. கயமுகனுற்.46);.

உடலை நெளித்து நெளித்து நடக்கின்றான்.

விடை சொல்லத் தெரியாமல் நெளிகிறான்.

அவன் பொறுமை யிழந்து நெளிகிறான்.

   5. வருந்துதல்; to suffer.

     “பொய்யாச் செந்நா

நெளிய வேத்திப் பாடுப” (புறநா.168);.

   6. குலைதல்; to be put into confusion, to be routed.

     “அனைய படைநெளிய” (கம்பரா. மூலபல .159);.

   7. அதுங்குதல்; to be dented, bent out of shape, as vessels.

   8. மிகுதியாதல்; to swarm, abound, as children.

அவனுக்குக் குழந்தைகள் மிகுதியாக நெளிந்து கொண்டிருக்கின்றன.

   9. ஏனம் முதலியவை அடிபட்டுப் பள்ளமாதல்; get dented, buckle.

குடம் கீழே விழுந்து நெளிந்து விட்டது.

   10. புரளுதல்; to roll over to tumble over.

     “நெளிய ராக்குருளை” (திருவிளை.இந்திரன் பழிதீ,73);.

     [நுள்(வளைவு); → நெள் → நெளி = வளைவு (முதா.); நெளி → நெளிதல்.]

 நெளி2 neḷittal,    4.செ.குன்றாவி.(v.t.)

   1. வளைத்தல்; to cause to bend, to be inclined, to be crumpled, to twist.

உடம்பை எத்தனை நெளி நெளிக்கிறான்.

   2. கோணுதல்; to wriggle or distort the body in walking, commonly in affectation.

சாலை நெளிந்து செல்லுகிறது.

உடலை நெளித்து நெளித்து ஆடிய பாம்பு நடனம் அருமை.

   3. அசைத்தல்; to shake

     “தண்டொன்று… நெளிப்பது” (கம்பரா.பிரமாத்.113);.

   4. வேலையைக் குழப்புதல்; to shirk work.

   5. ஏனம் முதலியவற்றில் நெளிவு ஏற்படுத்துதல்; cause a dent.

குடத்தின் வாய்ப் பகுதியைத் தட்டி நெளித்து விட்டாள்.

     [நெளி1 → நெளி2]

 நெளி3 neḷittal,    4.செ.குன்றாவி.(v.t.)

   செருக்குறுதல் (வின்.);; to make affected gestures in pride or contempt, to be insolent.

 நெளி4 neḷi, பெ. (n.)

   வளைந்த விரலணி வகை; a kind of ring, as having a peculiar curve.

     “அலங்கார நெளியிட்ட கையைக்காட்டாய்” (குற்றா.குற.66:2);. நெளி கணையாழி (மோதிரம்); அணிந்தவள்.

     [நுள் → நெள் → நெளி = வளைவு, வளைந்த அணி (மு.தா.);]