நெல்

நெல்1 nel, பெ. (n.)

   1. உணவுக்குப் பயன்படும் அரிசியைத் தரும் பயிர் வகை; rice plant.

     “நெடுங்கதிர் நெல்லின் நாண்மேய லாரும்” (ஐங்குறு.95);.

     “நெல்லும் உயிரன்றே நீருமுயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறநா.184);.

     “நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், நானிலத்தில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” (ஒளவையார்);.

   2. நெல்மணி; grain of paddy.

     “நெல்லும் பொரியும்” (மணிமே.6:95);.

   3. உணவு; Food.

     “நெல்லுண்ட நெஞ்சிற் கோர் நோய்” (திரிகடு.79);.

   4. எட்டு எள்ளளவு கொண்ட நீட்டலளவை (சிலப்.3:100, உரை);; standard of linear measures = 8 sesame Seeds.

   5. வாகை (அக.நி.);; siris.

     “நெல்லினா லலக்குங் காலு நிரப்பினான்” (கம்பரா.ஒற்றுக்கே.11);.

   ம., க., கோத. நெல்;   துட. நெக;குட. நெல்லீ

     [நுல்(ஒளி); → நெல் = பொன் போல் விளங்கும் தவசம் (கூலம்);.

     “சடைச் செந்நெல் பொன் விளைக்குந் தன்னாடு”

     “பொன் விளைந்த களத்தூர்” என்னுந் தொடர்களை நோக்கு, நெல்லிற்குச் சொல் என்னும் பெயர் தோன்றியதும் இக்கரணியம் பற்றியே.

சுல் → சுல்லி = அடுப்பு, மடைப்பள்ளி. சுல் → சுள் → சுடு → சுடர் . சுல் → சொல் → சொலி → சொலித்தல் =

எரிதல், விளங்குதல். சொலி → வ.ஜ்வல். நெற்கஞ்சி, நெற்சோறு, நெற்பொரி என்னும் கூட்டுச் சொற்களில் நெல் என்பது நெல்லரிசியைக் குறிக்கும்.]

     ‘நெல்’ புல்வகையைச் சேர்ந்த பயிர். இது உலகிலுள்ள எறும்பு முதல் யானை யீறாக உள்ள அனைத்து விலங்குகளுக்கும் உணவாகவுள்ளது. இது நன்செய், புன்செய் நிலங்களில் விளையும் பயிர். இவ்வகை நெற்கள் உருவ வேறுபாட்டினும், உரிசை வேறுபாட்டினும் பலவகைப்படும். இந்தியாவில் 100க்கு மேற்பட்ட வகை நெற்கள் கிடைக்கின்றன. இவற்றின் நிறம் பொன்மை, வெண்மை. இதன் தாயகம் தென்னிந்தியா. இந்தியா, சீனா, பர்மா, சப்பான் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது.

பெரும்பாலார் உழவைக் கொண்டே எல்லா செல்வங்களையும் பெற்றனர். அரசனும் உழவரிடம் பெற்ற வரியாலேயே அரசாண்டான்.

இவ்வகைப் பெருமை பெற்ற நெல்லின் வகைகள்:

   1. அரிக்கிராவி,

   2. அரியான்,

   3. அருஞ்சோதி,

   4. அழகியவாணன்,

   5. அறுபதாம் குறுவை – 60 நாளில் விளையும் பயிர்,

   6. அன்னதானக் குறுவை – மூன்று மாதப் பயிர்.

   7. அன்னதானச் சம்பா,

   8. அனுமந்தச் சம்பா,

   9. ஆடிக்கோடை – ஆடியில் அறுவடையாகும் நெல்.

   10. ஆவாரம் பூச்சம்பா,

   11. ஆனைக் கொம்பன்,

   12. இராசன்னம் – உயர்ந்த நெல் வகை,

   13. இராமன் சம்பா,

   14. இருப்பைப் பூச்சம்பா,

   15. இளங்கார் – இறங்குமோட்டான்,

   16. ஈசுரக்கோவை,

   17. ஈர்க்குச் சம்பா,

   18. உருண்டைக்கார் – 4 மாதப் பயிர்,

   19. உருண்டைச் சம்பா – 5 மாதப் பயிர்,

   20. ஊசிச்சம்பா,

   21. ஒட்டன்,

   22. கட்டிச்சம்பா -4 மாதங்களில் பயிராகும் நெல்,

   23. கடப்பநெல் – கறுங்குறுவை நெல் மூன்றுமாதப் பயிர்,

   24. கடம்பநெல்,

   25. கந்தசாலி – உயர்ந்த நெல்வகை,

   26. கந்தபத்தம்,

   27. கம்பஞ்சம்பா,

   28. கமுகம் பூச்சம்பா,

   29. கருங்குறுவை,

   30. கருடன் சம்பா,

   31. கருணை வெள்ளை,

   32. கல்மணவாரி-4 மாதப்பயிர்,

   33. கல்லுண்டைச் சம்பா-6 மாதப் பயிர்,

   34. கலவஞ்சம்பா (சிறுமணிநெல்);- 6 மாதப்பயிர்,

   35. கலிங்கஞ்சம்பா4 அல்லது 5 மாதப்பயிர்,

   36. கலிவிராயன்,

   37. கவரிச்சம்பா-5 மாதப்பயிர்,

   38. கற்றாழைச்சம்பா,

   39. கறுத்தகார்-5 மாதப் பயிர்

   40. கறுப்பன்-மூன்று மாதப்பயிர்

   41. கனகச் சம்பா-உயர்ந்த நெல்வகை.

   42. காடைக்கழுத்தன்-5 மாதப்பயிர்,

   43. காடைச் சம்பா,

   44. கார்த்திகைச்சம்பா,

   45. கார் நெல்,

   46. காலிங்கராயன் சம்பா,

   47. காளான் சம்பா,

   48. கிச்சடி சம்பா,

   49. குங்குமச்சம்பா,

   50. குடப்பட்சி,

   51. குடுப்புக்கார்,

   52. குண்டுச்சம்பா,

   53. குத்தாளை-மானாவாரி நெல்,

   54. குதிரைவாலிச் சம்பா,

   55. கும்பாளைச் சம்பா,

   56. குருவிக்கார்,

   57. குருவிவாலன்,

   58. குலவாழை-7 அல்லது 8 மாதங்களில் அறுவடையாகும் சம்பா நெல்,

   59. குழியடிச்சான்,

   60. குளவாழை-குளக்கசிவு நீரில் பயிராகும் நெல்வகை,

   61. குறுவைநெல்,

   62. குறுஞ் சம்பா,

   63. குன்றிமணிச்சம்பாசெந்நிறநெல்,

   64. கூர்க்கருப்பன்-உயர்ந்த நெல் வகை,

   65. கூரன்,

   66. கைவளைச்சம்பா,

   67. கோடைச் சம்பா,

   68. சடைச்செந்நெல்-சம்பா வகை நெல்,

   69. சண்டிக்கார்-கார் நெல்வகை,

   70. சம்பாநெல்,

   71. சரப்பாளிச் சம்பா,

   72. சரை நெல்.

   73. சவர் நாயகம்,

   74. சாரலி,

   75. சித்திரைக் கடப்பு,

   76. சித்திரைக் கார்,

   77. சித்திரைக் காலி,

   78. சித்திரையன்,

   79. சிரசுத கோப்பு,

   80. சிலுவைக் கடப்பு – கடப்பநெல் வகை,

   81. சிவப்புக் குத்தாளை,

   82. சிவப்புச் சிறுமணியான்,

   83. சிவப்புச் சிறு முறியன்,

   84. சிவப்பு மிளகுச் சம்பா,

   85. சிறுகிட்டாஞ்சி,

   86. சிறுகுரும்பை,

   87. சிறு குறுவை,

   88. சிறுபாளைச் சம்பா,

   89. சிறுமணிச்சம்பா,

   90. சின்னச்சம்பா,

   91. சீரகச் சம்பா,

   92. சீரங்கி,

   93. சீவன்சம்பா,

   94. சீனட்டி,

   95. சீனநெல்,

   96. சுகதாகச்சம்பா,

   97. சுத்தல் சம்பா,

   98. சுருணை வெள்ளை,

   99. செங்கண்ணி,

   100. செங்கணிக்கார்,

   101. செங்கணிக் குறுவை,

   102. செங்கலதை,

   103. செஞ்சம்பா,

   104. செத்துவிருப்பா நெல்,

   105. செம்பவளச் சம்பா,

   106. செம்பாளை,

   107. செம்மிளகிச்சம்பா,

   108. செருப்பளிச் சம்பா,

   109. செருமலை யரியன்,

   110. சேமாளைச் சம்பா,

   111. சேரலி,

   112. சொளி குரும்பை,

   113. தங்கச் சம்பா,

   114. தட்டார வெள்ளை,

   115. திருவரங்கம்-திருவரங்கம் பகுதியில் பயிராவது,

   116. தில்லை-சிதம்பரம் பகுதியில் பயிராவது,

   117. துய்யமல்லிச் சம்பா,

   118. துலுக்கடுவன்,

   119. துவரன்சம்பா-தென்னெல்,

   120. தோட்டச் சம்பா,

   121. நயேந்திரப் பாலை,

   122. நரியன் சம்பா,

   123. நரையான்,

   124. நவரப் புஞ்சை,

   125. நவரை,

   126. நாவல் நெல்,

   127. நீலச் சம்பா (நீர்பாய்ச்சல் இல்லாமல் விளைவது);,

   128. நேத்திரப்பள்ளி,

   129. பங்களாச்சம்பா,

   130. பஞ்ச பாலை,

   131. பரக்கொடை,

   132. பரவழச் சம்பா,

   133. பலான் சம்பா,

   134. பலுக்கினியன்,

   135. பழனிச்சம்பா,

   136. பள்ளக்கருக்காய்,

   137. பாலன் சம்பா,

   138. பிச்சைவாரி,

   139. பிசானம்,

   140. பிசினி,

   141. புட்டரிசிநெல்,

   142. புழுகுச் சம்பா,

   143. புளங்கல்,

   144. புனுகுச் சம்பா,

   145. பூம்பாளை,

   146. பெங்காளம்,

   147. பெரிய சம்பா,

   148. பொங்கற்சம்பா,

   149. பொச்சாலி,

   150. பொன்கம்பி,

   151 மடங்கல்,

   152. மடுவிழுங்கி,

   153. மணக்கத்தைநெல்,

   154. மணிச்சம்பா,

   155. மல்லிகைச்சம்பா,

   156. மலைகுலுக்கி,

   157. மானாவாரி,

   158. மிளகுச்சம்பா,

   159. முட்டைக்கார்,

   160. மைக்கண்,

   161. மைச்சம்பா,

   162. மோசனம்,

   163. வரிச்சம்பா,

   164, வளைதடிச்சம்பா,

   165. வாடைச்சம்பா,

   166. வாலான் (குதிரைவாலன்);,

   167. வெண்ணெல்,

   168. வெள்ளைக்கார்,

   169. வெள்ளை மிளகுச் சம்பா.

நெய்பயிருக்கு ஏற்ற எருவகை : எருக்கிலை, கொழுஞ்சி, அவிரி, ஆவிரை, வேப்பிலை, நொச்சி, வாகை, பூவரசு, புங்கு வாதநாராயணன் இலைகளும், ஆமணக்கு, வேம்பு, வேர்க்கடலை, இருப்பை, புங்கு புன்னை முதலான பிண்ணாக்குகளும் போடலாம். நிலத்தில் களர் இருந்தால் பாச்சான், பிரண்டை, பனையோலைகளைப் போட்டு மிதித்து அதிகத் தண்ணீர் கட்டினால் களர் எடுபட்டுப்போம். ஆவின் எருவைப் போட்டால் சோறு சுவையாக இருக்கும்.

நெய்பயிருக்கு தக்க நிலம்: நெற்பயிரானது அதிகத் தண்ணிருள்ள இடங்களிலெல்லாம் மிகுதியாக விளையக் கூடினும் களிமண், செம்மண், ஆற்றோரம், மணல்படுக்கை, மிச்சரமண் முதலானவையே இப்பயிருக்கு ஏற்றவை.

நெற்பயிருக்கு வேண்டிய உழவு :

     “நெல்லுக்கு நான்குழவு” என்னும் பழமொழி நம் நாட்டாருக்குத் தெரிந்த செய்தி. நெல் தொன்றுதொட்டுச் சேற்றில் விளையும் பயிராகையால் இதற்குப் புழுதியுழவு கூடாது. மேலும், மண்மட்க வேண்டியதைக் கருதி நான்கு நாள் விட்டு, விட்டு உழுதல் வேண்டும்.

நெற்பயிரின் வேர் ஒரு விரலம் (அங்குலம்); வளர்ந்து பரவும் தன்மையுடையதாதலால் உழவுக்குத் தக்கபடி பயிர் செழித்து வளரும்.

நெற்பயிர் : இது புன்செய், நன்செய் நிலங்களில் பயிரிடப்படுவது. நிலத்தை நன்றாய்யுழுது புழுதியாக்கி உலர்த்தி நன்றாகக் காய்ந்த விதைகளைப் புழுதியில் விதைப்பர். இது புழுதி கால் பயிர். கழனியை உழுது நீர்ப்பாய்ச்சி எருத்தழை முதலியன போட்டு அவை நன்றாயழுகிய பின் பறம்படித்து நாற்றுக்களைத் தொலைவாக நட்டுப் பயிரிடுவது நடவு. இது நன்செய் பயிர். நெல் பற்றிய பழமொழிகள் நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ? நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா? நெல்லுவகை எண்ணினாலும் பள்ளி வகை எண்ண முடியாது. நெல் இருக்கப் பொன், எள் இருக்க மண். நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான். நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும். நெல்லுக் காய்க்கிற மரம் கேட்டவன் போல. நெல்லுக் குத்துகிறவனுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா? நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாயும். நெல்லுக்குள்ளே அரிசி. நெல் விளைகிற நிலமும் தெரியாது, நிலாக் காய்கிற இடமும் தெரியாது.

 நெல்2 nel, பெ. (n.)

   1. நெல்லி; Indian gooseberry.

   2, கீழாநெல்லி; a small plant with slender green main branches – Phyllanthus niruri (சா.அக.);.

     [நெல்லி → நெல். கடைக்குறை]