திருநெல்வேலி என்று அழைக்கப்படும் இவ்வூர், திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகராகவும் அமைகிறது. பாண்டிய நாட்டைச் சார்ந்த இவ்வூர், ஞானசம்பந்தரால் பாடல் பெற்று அமைகிறது.
பொருந்து தண்புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்று பைபைம்பூம்
செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி (350-1)
துன்று தண் பொழிலினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல் வந்துலவிய திருநெல்வேலி (350-2)
ஈண்டு மாமாடங்கள் மாளிகை மீதெழு கொடி மதியம்
தீண்டி வந்துலவிய திருநெல்வேலி (350-4)
என்ற இவரது பாடலடிகளில் திருநெல்வேலி. இவரது காலத்திற்கு முன்னரேயே செழிப்பும், பெருமையும் பெற்று விளங்கிய நிலை தெளிவாகத் தெரிகிறது. எனவே இவர்க்கும் முன்னைய வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதனை நோக்கத் தெரிகிறதா ? எனக் காணின் சாலியூர் பற்றிய எண்ணம் அமைகிறது.
மதுரைக் காஞ்சியில்,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ (87.88)
என்னும் பாடலடிகள். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ புகழைப்பாட எழுந்தவை. இதற்குத் தம் பத்துப்பாட்டு உரையில், டாக்டர் உ.வே.சா. சாலியூர் எனப் பொருள் எழுதுகின்றார். மேலும் இதனை நெல்லையோடுச் சார்த்திப் பொருள் சொல்வோரையும் காண்கின்றோம் இவற்றைக் கொண்டு எஸ்.கணபதிராமன் தம் பொருநை நாடு என்ற நூலில், இங்கு நெல்லின் ஊர் என்பது திருநெல்வேலியே எனக் குறிக்கின்றார். ஆயின் தொகுதி ஒன்றில், ஆசிரியர் இதனை ஆந்திர நாட்டு நெல்லூர் எனச் சுட்டுகின்றார் எனினும், சங்க இலக்கியச் சான்றுகளையும் இவண் ஆராய்ந்து, முடிவுக்கு வரமுடியுமா எனக் காணலாம். சாலி என்பது சங்க காலத்தில் சிறப்பு மிக்க நெல்வகை யாகக் கருதப்பட்டது என்பது தெளிவு.
கருந்தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்
சாலி நெல்லின், சிறை கொள் வேலி
ஆயிரம் விலை ளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடுகிழவோனே
என்பது பொருநர் ஆற்றுப்படை (242-48).
அடுத்து மதுரைக் காஞ்சி குறிப்பிடும்,
சீர் சான்ற உயர் நெல்லின்
எனவே ஊர் கொண்ட உயர் கொற்றவ என்ற அடிகளில் அமையும் நெல்லின் ஊருக்கு, உ. வே. சா உரை சாலியூர் என்று குறிப்பிடுகிறது. எனினும், நெல்லுக்கே சீர் சான்ற உயர் என்ற அடை பொருத்தமானதே. சாதரணமாகப் பார்த்தாலும், நெல்லின் ஊர் என்ற எண்ணம் பொருத்தமாக அமைகிறது. இந்நிலையில் இதனை நெல்லின் ஊர் என்று இணைத்துத்தான் சுட்டவேண்டும் என்பது இல்லை. நெல்லை கொண்ட ஊர்’ நெல்வளமிக்க ஊர் என்ற நிலையிலும் பொருத்தலாம். எனவே பாண்டிய நாட்டினுள் உள்ள நெல்வேலியை உடைய கொற்ற வனே என்று விளித்திருக்கலாம். பாண்டிய நாட்டில் நெல்வேலி சிறப்புடன் திகழ்ந்ததன் காரணமாக இவ்வாறு சிறப்பாகச் சுட்டி அமைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும், நெடுஞ்சடையன் பராந்தகனது வேள்விக்குடிச் செப்பேடு,
வில்வேலி கடற்றானைன மயை நெல்வேலி செருவென்ற
பெருவீரன் எனச் சிறப்பிக்கின்றது’ என்ற எண்ணத்தையும் காண்கின்றோம். மேலும் சுந்தரர்
நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நிறை சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் (39-8)
எனச் சுட்டுகின்றார். எனவே நெல்வேலியை வெல்வது சிறப்பாகக் கருதப்பட்டது எனத் தெரிகிறது. இந்நிலையிலேயே சங்க இலக்கியத்தும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் புகழைச் சுட்டுமிடத்து. நெல்வேலியைக் கொண்ட மன்னவன் எனச் சுட்டி இருக்கலாம். என்பது இதன் செழிப்பினைச் சேக்கிழாரும் சுட்டுகின்றார். செல்வத் திருநெல்வேலி இவர் காட்டும் நிலை. எனவே பெருநை பாய்ந்ததன் காரணமாக நெல்வயல்கள் சூழப்பட்ட ஊராக இது அமைந்த காரணமே இப்பெயர்க் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும், புராணக் கதையும் இப்பெயர்க் குறித்து அமைகிறது.