நெற்றி1 neṟṟi, பெ. (n.)
1. தலைமுடிக்குக் கீழும் புருவங்கட்கு மேலுமுள்ள முகத்தின் பகுதி, நுதல்; forehead.
“கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலிமதுரை” (திருவாச. 8:8);,
“மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் மாறா துற்ற வடுப்படுநெற்றி” (மதுரைக்.594,595);.
“நெய்துடிந்தட்ட விளரூன் அம்புகை எறிந்த
நெற்றிச் சிறுநுண் பல்வியர் பொறித்த குறுநடைக் கூட்டம் வேண்டுவோரே” (நற்.41);.
“தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்” (குறுந்.107);.
“நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே.” (பரிபா. 11:99);.
“சுடர்விரிந் தன்ன சுரிநெற்றிக்காரி விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக்குடர் சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றங்காண்” (கலித்.101);.
“நெற்றிச்சிவலை நிறையழித்தான் நீண் மார்பில்” (கலித்.104);.
“வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்குஞ் சுரி நெற்றிக் காரியும்” (கலித்.105);.
“எல்லித் தங்கிக் குடுமி நெற்றி நெடுமரச் சேவல் தலைக்குரல் விடியல் போகி” (அகநா. 87);.
“மகர நெற்றி வான்றோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்” (அகநா. 181);.
“குடுமிநெற்றி நெடுமாத் தோகை” (அகநா. 194);.
“தளிர்புரை கொடிற்றிற் செறிமயிர் எருத்திற் கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்” (அகநா. 367);.
“பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக் கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் அருமிளை இருக்கை” (புறநா. 326);.
“கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன” (புறநா. 374);.
“கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும்” (சிலப். 17:1);.
“நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்” (சிலப். 17-கொளு.-2);.
“மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு” (மணிமே. 19:19);.
2. முன்பகுதி; front.
“நிடதத்தி னெற்றி” (கம்பரா. மருத்து.17);.
3. உச்சி; top.
“கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடை” (சீவக.31);.
“நீளுறு மேருவி னெற்றிமுற்றிய” (கம்பரா. சடாயுகாண்.7);.
4. வானம்; sky.
“நெறிந்தன மாசுன நெற்றியே” (தக்கயாகப். 524);.
5. கட்டடத்தின் மேனிலை முகப்பு; front side of the storey of a building, facade.
6. தண்டிகை முதலியவற்றின் தலைப்பு (வின்.);; end or extremity of a board, timber etc.
7. மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம் (வின்.);; the upper part of the trunk of a tree where it branches off.
8. முன்னணி,
முன்படை; van of an army.
“நெற்றியி லரக்கர் பதிசெல்ல” (கம்பரா. ஒற்றுக்கேள்வி. 6);.
“தனியனெற்றி யிற்சார்வலென்றனன்” (கந்தபு. அசுரர்யா. 3.);
9. தலை; head.
“முகிற்றழிஇயசும்பறாத நெற்றிய” (சீவக. நாமக.71);.
10. முகம்; face.
“சோலை நெற்றியிற்றொடுத்த” (கூர்மபு. அட்ட 18);.
ம. நெற்றி; க.தெ.,து. நெத்தி; துட. நித்தி; கோத. நெக் (nec);; குட. நெத்தி;கொலா.
நெத்தி; நா. நெத்தி; கோண். நேக் (nec);;மா. நெபெ.
[நூல்(முன்மை); → நொல் → நெல் → நெறி → நெற்றி.]
நெற்றி2 neṟṟi, பெ. (n.)
முயற்சி; effort.
“நெற்றி அல்பமாய்ப் பலம் கணக்கப்பெறுமதிறே” (ஈ.டு,9.1:4);.
[நெற்று + இ. எண்ணம் நெற்றாகியதும் முயற்சி தொடங்கும்.]
நெற்றி3 neṟṟi, பெ. (n.)
நடு; middle,
“காலை நெற்றியி லகிலமுஞ்சுடு கனலிகுறைபட” (தக்கயாகப். 334);.